பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், 92, இன்று காலமானார். கோவிட் நோயால்  பாதிக்கப்பட்டிருந்த அவர் ஜனவரி 8ஆம் தேதி முதல் மும்பையில் உள்ள பிரிட்ஜ் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

முன்னதாக உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவரது உடல்நிலை தேறி வருவதாக ஜனவரி 27ஆம் தேதி கூறிய மருத்துவர்கள் வென்டிலேட்டர் மூலம் வழங்கிய சிகிச்சையை நிறுத்தினர்.

1929 ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர் லதா மங்கேஷ்கர். இவரது இயற்பெயர் ஹேமா. ஆனால் அவரது தந்தையின் நாடகங்களில் லத்திகா எனும் பாத்திரத்தில் இவர் நடித்து வந்தார். அதனால் அனைவரும் அவரை ‘லதா’ என்று அழைக்கத் தொடங்கினர். அதுவே அவரது பெயராகவும் ஆகிப்போனது.

இவரது தந்தை தீனாநாத் மங்கேஷ்கர் மராத்தி மொழியில் நன்கு அறியப்பட்ட பாடகராகவும், நாடக ஆசிரியராகவும் இருந்தார். அவரது ஐந்து குழந்தைகளில் முதல் குழந்தை லதா மங்கேஷ்கர்.

சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்ற லதா மங்கேஷ்கர், இந்திய சினிமாவில் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1989ஆம் ஆண்டு பெற்றார்.

1949ஆம் ஆண்டு மகள் எனும் இந்தி படத்தில் தனது முதல் திரை இசை பாடலை பாடி இசை பயணத்தை தொடங்கினார்.

நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 1974 ஆம் ஆண்டு உலகளவில் அதிக பாடல்களை பாடியதற்காக “கின்னஸ் புத்தகத்தில்” இடம் பிடித்தார். 1975 ஆம் ஆண்டு ரூதே ரூதே பியா (கோரா காகஸ்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.

1952-ல் இந்தியில் வெளியான ஆண் திரைப்படம் ‘ஆண் முரட்டு அடியாள்’ என்ற டைட்டிலில் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. அந்தப் படத்தில் ‘இழந்தேன் உன்னை அன்பே’, ‘நகரு நகரு’, ‘பாடு சிங்கார பாடலை’, ‘இன்று எந்தன் நெஞ்சில்’ ஆகியப் பாடல்களையும் லதா மங்கேஷ்கரே பாடியிருந்தார்.

1988-ல், இளையராஜா இசையில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான, ‘சத்யா’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘வளையோசை’ பாடலை, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடினார்.  ‘என் ஜீவன் பாடுது’ என்ற படத்தில் இடம்பெற்றிருந்த ‘எங்கிருந்தோ அழைக்கும்’ என்ற பாடலை, பாடகர் மனோவுடன் இணைந்து டூயட்டாகவும், சோலோவாகவும் பாடிருந்தார்.

இந்தியாவின் மிகவும் உயரிய விருதான பாரத ரத்னா விருது 2001ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. எம்.எஸ். சுப்புலட்சுமி பிறகு பாரத ரத்னா விருது பெற்ற பாடகர் லதா மங்கேஷ்கர்.