‘சிறையில் மரணங்கள்’ திகைப்பூட்டுகின்றன – வழக்கறிஞர் மன்றம்

போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் கைதிகள் தொடர்ந்தார்போல் மரணம் அடைந்து வருவது தங்களுக்குத் திகைப்பூட்டுவதாக மலேசிய வழக்கறிஞர் மன்றம் கூறுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை ஏழு நபர்கள் மரணமடைந்துள்ளனர் இவர்கள் அனைவரும் போலீஸ் பாதுகாப்பில் இருந்தவர்கள்.

அம்மன்றத்தின் தலைவர்  ஏ.ஜி. காளிதாஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த மரணங்கள் கிள்ளான், பினாங்கு, திரங்கானு, கோத்தா பாரு, தைப்பிங் மற்றும் கோலாகங்சார் ஆகிய இடங்களில் நடந்துள்ளன.

இதில் மரணம் அடைந்த குமார் செல்வதுரை என்பவர் பினாங்கில் உள்ள காவல் நிலையத்தில் மரணமடைந்தார் என்று அவருடைய குடும்பத்தினர் கூறுகிறார்கள் இவர் மரணம் அடைந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு தான் அந்தத் தகவல் கிடைத்ததாகவும் அதற்கு முன்பு காவல்துறையினர் இது சார்பான எந்தத் தகவலையும் கொடுக்காமல் மழுப்பி வந்தனர் என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுபோன்ற தகவல் உண்மையானதாக இருந்தால் இது போலீசாரின் நேர்மைக்கும் வெளிப்ப்டைதன்மைக்கும் பலத்த சவாலாக அமையும். மேலும் இது காவல்துறை எந்த அளவுக்குக் கைது செய்பவர்களை நடத்துகின்றது என்பதைக் குறித்துப் பல சந்தேகங்களை உருவாக்கும். இவை குறித்துக் கேள்வி எழுப்பிய வழக்கறிஞர் மன்றம், அண்மையில் உருவாக்கப்பட்ட காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பு பற்றிய ஒரு பிரிவு திருப்திகரமான பதில்களை அளிக்குமா என்று வினவுகின்றனர்.

அனைத்துலக அளவில், மலேசியா ஐக்கிய நாட்டு மனித உரிமை சபையில் அங்கத்தினராகத் தேர்வு செய்யப்பட்ட நாடாகும். இந்நிலையில் இது போன்ற தொடர்ச்சியான காவல் பாதுகாப்பில் இருப்பவர்களின் மரணம், நம் நாட்டின் அனைத்துலக மதிப்பீட்டுக்குப் பலத்த சவாலாகவே  அமையும்.

நாம் இந்நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் ஒவ்வொரு மனிதரும் கௌரவமாகவும் பயமின்றியும் முழுமையான மனித உரிமைக்குரிய  பாதுகாப்புடனும் இருப்பது அத்தியாவசியமாகும்.

யாராவது ஒரு மனிதருக்கு மனித உரிமை அத்து மீறல் நடக்குமானால் அதுபற்றிய முழுமையான விசாரணையும் முக்கியமாகிறது. நாம் ஒவ்வொரு மனிதரின் சுதந்திரத் தன்மையையும் அவர்களுடைய உரிமைகளையும் சர்வதேசச் சட்டங்களுக்கு ஏற்றவகையில் மதிப்பளிக்க வேண்டும்.

காவல்துறையின் அத்துமீறல்களை விசாரணை செய்ய ஐபிசிஎம்சி (IPCMC) என்ற தன்னிச்சையான ஒரு கமிஷனை முன்மொழிந்து இருந்தனர். இந்தக் கமிஷன் வழி தன்னிச்சையாகச் செயல்பட்டுக் காவல்துறையின் முறைகேடான நடவடிக்கைகளின் மீது புகார் செய்யவும் அவை சார்ந்த குற்றங்களை விசாரணை செய்யவும் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கும் வகையில் செயல்படவும் இயலும்.

எனவே இந்தக் கமிஷன் மிகவும் அத்தியாவசியமான கமிஷனாகும்.  காவல்துறை துறையினர் தங்களைத் தாங்களே விசாரணை செய்து கொள்வது ஏற்கக் கூடிய ஒன்றல்ல. காவல்துறையினரை விசாரணை செய்யும் பொறுப்பு அவர்களைச் சார்ந்ததாக இருக்க இயலாது. அந்த விசாரணையைத் தன்னிச்சையான ஒரு கமிஷன் தான் செய்யவேண்டும். எனவே இந்த ஐ பி சி எம் சி கமிஷன் மிகவும் முக்கியமானது. அதனை அமுல்படுத்த அரசாங்கம் முன்வரவேண்டும்.

குற்றவியல் சட்டப் பிரிவு 334-இன் படி காவலில் மரணமடையும் ஒவ்வொரு நபர் பற்றியும் ஒரு முழுமையான விசாரணைக்கு வேண்டும். அந்த மரணம் சார்பாக முழுமையான விசாரணை இந்தப் பிரிவில் நடத்தப்பட வேண்டும் என்ற சட்டம் உள்ளது.

காவல் துறையில் கைதியாக இருக்கும் ஒருவர் மரணமடையும் வேளையில் அவரது மரணம் எப்படி ஏற்பட்டது என்பதைச் சுயேச்சையாக விசாரணை செய்து அதன் வழி உண்மையை வெளிக்கொணர வேண்டும். இது ஒரு அடிப்படையான மனித உரிமையாகும்.

ஒருவர் காவல்துறையின் பாதுகாப்பில் இருக்கும் பொழுது அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் முடிவு செய்யும் வரை அந்த நபரைக் காவல்துறையினர் பாதுகாப்புடனும் கண்ணியமாகவும் கவனமாகவும்  வைத்திருக்க வேண்டும்.

அதை விடுத்துக் காவல்துறையில் கைதியாக இருக்கும் ஒரு நபர் துன்புறுத்தப்பட்டு அதன் விளைவால் மரணம் அடையும் பொழுது அது அந்தத் தனிப்பட்ட நபரின் மனித உரிமைக்கு இழைக்கப்படும் ஒரு மாபெரும் அநீதியாகும்.

இதுபோன்ற நடத்தைகளை வழக்கறிஞர் மன்றம் கடுமையாகக் கண்டனம் செய்கிறது. இப்படிப்பட்ட எவ்வகையான செயலும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

காவல்துறையின் பாதுகாப்பில் இருக்கும் எந்த நபருக்கும் இனி மரணம்  ஏற்படக்கூடாது. அந்தச் சூழலுக்குக் காவல்துறையினர் தங்களது பணிகளைச் செயலாக்கம் காணவேண்டும். காவலில் இருக்கும் நபர் ஒருவர் இறந்தால் கூட அது மிக அதிகமானதாகும்.