இராகவன் கருப்பையா- இந்நாட்டில் தமிழ் பள்ளிகளையும் தமிழ் மொழியையும் பாதுகாக்க நாம் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் தொடர்ந்தார்போல் சவால் மிக்க சோதனைகளும் நம்மைத் தாக்கிய வண்ணமாகத்தான் உள்ளன.
தமிழ், சீனப் பள்ளிகளை இழுத்து மூடவேண்டும் என அவ்வப்போது விஷக் கருத்துகளைக் கக்கிக் கொண்டிருக்கும் சில தரங்கெட்ட அரசியல்வாதிகள் மட்டுமின்றி அவ்வாறு செய்ய வேண்டும் என நீதிமன்றம் வரையில் சென்றுள்ள ஒரு இனவெறிக் கும்பலைச் சமாளிப்பதற்கும் நாம் அல்லும் பகலும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
தாய்மொழிப் பள்ளிகள் இந்நாட்டில் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இயங்குகின்றன எனக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ள போதிலும் அத்தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதும் நாம் அறிந்த ஒன்றுதான்.
இந்நிலையில் எஸ்.பி.எம். தேர்வுகளில் தமிழை ஒரு பாடமாக எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அண்மையில் வெளியான ஒரு தகவல் நமக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், தமிழை எல்லா நிலைகளிலும் வளர்க்க வேண்டும் எனும் நம் உணர்வுக்கும் முயற்சிகளுக்கும் இந்தக் கசப்பான செய்தி ஓரு பின்னடைவையும் ஏமாற்றத்தையும் அளிக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.
தமிழ் மொழியைத் தேர்வு பாடமாக எடுப்பதற்கு நம் மாணவர்கள் ஏன் தயங்குகின்றனர் என்பதைக் கண்டறிந்து, பிரச்சினைகள் இருக்குமாயின் அவற்றைக் களைவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் முன்னெடுப்பது நம் அனைவருடைய கடமையாகும்.
மழைக்குக் கூடத் தமிழ்ப் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியிராத எண்ணற்ற மாணவர்கள் தமிழ் மொழி மீது உள்ள அளவு கடந்த பற்றினால் சுயமாகவே அம்மொழியைக் கற்று எஸ்.பி.எம். உள்படப் பல நிலைகளில் அதனைத் தேர்வுப் பாடமாக எடுத்து இன்று உயர்ந்த பதவிகளில் உள்ளனர்.
அவர்களில் பலர் தமிழ் மொழிப் பற்றாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும், ஆசிரியர்களாகவும், மொழி பெயர்ப்பாளர்களாகவும், ஊடகவியலாளர்களாகவும் கூட வரலாறு படைத்து வருகின்றனர்.
இவர்களோடு ஒப்பிடும் போது, தமிழ்ப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் மொழியை எதிர் கொள்வது மிகவும் சுலபமான ஒன்று என்பதில் கிஞ்சிற்றும் ஐயப்பாடு இருக்க முடியாது.
இருந்த போதிலும் தமிழ் மொழியை ஏன் இவர்கள் புறக்கணிக்கின்றனர் என்பதே தற்போதைய பிரதானக் கேள்வி.
தமிழைத் தற்காக்க ஒரு புறம் நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நம் மாணவர்களே அதனை அலட்சியப்படுத்துவது கீழறுப்பு நடவடிக்கைக்குச் சமமாகும்.
எனவே நிலைமை மேலும் மோசமாகாமல் இருக்க வகை செய்யும் பொருட்டு ஆசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் ஆறாம் வகுப்பின் போதே மாணவர்களுக்குத் தமிழ் மீது உறுதியான ஒரு அடித்தளத்தை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதற்கடுத்த 5 ஆண்டுகள் அவர்கள் தேசிய இடைநிலைப் பள்ளிகளில் கல்வியைத் தொடர்வதால் தமிழ்க் கல்வியுடனான அவர்களுடைய தொடர்பு துண்டிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்பதையும் நாம் மறுக்க இயலாது. நிறைய இடைநிலைப் பள்ளிகளில் தாய் மொழிக் கல்வி போதிக்கப்படாததால் இந்நிலை ஏற்படக்கூடும்.
இந்தக் காலக்கட்டத்தில்தான் அவர்களுடைய ஊக்கம் குறையாமல் இருப்பதற்குப் பெற்றோர்களும் தமிழ் சார்ந்த இயக்கங்களும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
தமிழ் மொழித் தேர்வுகளுக்குத் தயார் செய்வது மற்றும் மொழி வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றக்கூடிய பங்கு முதலியவை தொடர்பான கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வது குறித்தும் தமிழ் சார்ந்த இயக்கங்கள் பரிசீலனை செய்யலாம்.
முளையிலேயே கிள்ளி இப்பிரச்சினைக்கு இப்போதே நாம் தீர்வுகாணும் நடவடிக்கைகளை முடுக்கிவிடாவிட்டால் இந்நாட்டில் நம் மொழியை வேரோடு அழிக்கத் துடிக்கும் ஜந்துகளுக்குப் பிறகு குளிர்விட்டுப் போகும்.
நியாயமான கருத்து. தமிழ்ப்பள்ளிக்கு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்ந்து படித்தால்தான் இடைநிலைப் பள்ளியிலும் தமிழ்ப்படிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும். இடைநிலைப் பள்ளியில் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படிப்பதற்கு பல தடைகள் எழுகின்றன. அவற்றில் முதன்மையானது மாணவர்களின் அலட்சியமும் பெற்றோர்களின் அக்கறையின்மையும்.
எனவே ( 1) தொடர்பரப்புரை (2) சிறப்பு ஊக்கத்தொகை / உதவி வழங்கப்பட வேண்டும்.
பல இடைநிலைப் பள்ளிகளின் நிருவாகமும் ஆசிரியர்களும் தமிழ்ப்பாடம் எடுப்பதற்கு ஏதுவான சூழலை உருவாக்குவதில்லை. ஊக்குவிப்பதும் இல்லை.
முனைவர் குமரன் வேலு