வெளிநாட்டு தொழிலாளர்கள் பிரச்சினை- எம்.சரவணன் கண்டனம்

வெளிநாட்டு பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பாக பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் அப்துல்லா கூறியதற்கு மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தொழில்துறையில் உள்ள தொழிலாளர் பற்றாக்குறையுடன் ஒப்பிடும்போது பணிப்பெண்களை பணியமர்த்துவதில் உள்ள சிக்கலைத் தீர்ப்பதற்கு அமைச்சர் முன்னுரிமை அளித்ததாக மரியா கூறினார்.

தொழில் துறை தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதிக்கும் முன்னர் உள்நாட்டு உதவியாளர் ஆட்சேர்ப்புக்கு தீர்வு காண்பதை இந்தோனேசியா ஒரு முன்நிபந்தனையாக முன்வைத்துள்ளது என்று சரவணன் (மேலே) சுட்டிக்காட்டினார்.

“இந்தோனேசியாவுடன் பணிப்பெண்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பல ஆண்டுகளாக காலாவதியாகிவிட்டது.

“எனவே, பணிப்பெண்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திடாத வரை, இந்தோனேசியா தனது தொழிலாளர்களை மலேசியாவிற்கு வர அனுமதிக்காது என்ற நிபந்தனையை விதித்துள்ளது. அதனால் தான் நாங்கள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முயற்சிக்கிறோம்.

மரியா பொதுவெளியில் விமர்சிக்காமல் தன்னிடம் கேட்டிருக்கலாம் என்றார் சரவணன்.

“அவருக்கு உண்மைகள் தெரியவில்லை என்றால், அவர் என்னை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கலாம், விளக்கம் அளிக்க நான் தயார்’. என்றார்.

பல தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகின

வீட்டுப் பணியாளர்களின் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் அழுத்தம் கொடுத்து வரும் அதே வேளையில், கோவிட் -19 தொற்றுநோயால் கிட்டத்தட்ட இரண்டு வருட பின்னடைவுக்குப் பிறகு பொருளாதாரம் மீண்டு வந்த போதிலும் பல தொழில்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதில் சிரமப்படுகின்றன.

மரியா மலேசிய உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு (FMM) புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டினார், கடுமையான மனிதவள பற்றாக்குறையை சமாளிக்க மற்றும் வணிகங்களை தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு கொண்டு வர இந்த ஆண்டு 600,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

உள்ளூர்வாசிகள் அத்தகைய வேலைகளில் ஈடுபட விரும்பாததால் இது மோசமாகியது.

“(கோவிட்-19) முடக்கத்திற்கு முன், சமூக பாதுகாப்பு அமைப்பில் (Socso) பதிவு செய்யப்பட்ட 1.8 மில்லியன் தொழிலாளர்கள் இருந்தனர், இன்று 1.1 மில்லியன் தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர். கிட்டத்தட்ட 700,000 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

சரவணன், இந்த தட்டுப்பாடு பற்றி முழுமையாக அறிந்திருப்பதாகவும், அதற்காக 24 மணி நேரமும் உழைத்து வருவதாகவும் கூறினார்.

“அதே நேரத்தில் தொழில்துறையில் உள்ளூர் தொழிலாளர்களின் வேலைகள் பாதுகாப்பை  நான் உறுதி செய்ய வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.