வீட்டுப் பணியாளர் புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்த மாதம் கையெழுத்தாகும் சாத்தியம்- சரவணன்

இந்தோனேசிய வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) மலேசியா அடுத்த மாதம் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுவதாக மனிதவள அமைச்சர் எம் சரவணன் தெரிவித்தார்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தேதியை இந்தோனேசிய அரசு விரைவில் முடிவு செய்யும் என்றார்.

“உண்மையில், பிப்ரவரி தொடக்கத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நாங்கள் நம்பினோம், ஆனால் நிலைமை பொருத்தமானதாக இல்லாததால் அது ஒத்திவைக்கப்பட்டது.

“இந்தோனேசியாவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்பதால், அவர்கள் (இந்தோனேசிய அரசாங்கம்) மார்ச் மாதத்தில் தேதியை நிர்ணயிப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.

இன்று சிரம்பானில் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் 1988 (சட்டம் 342) ஆகியவற்றின் கீழ் சிறப்பு ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கையில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, சரவணன் புரிந்துணர்வு ஒப்பந்த்தில் கையெழுத்திடுவது இரு நாடுகளுக்கும் குறிப்பாக கோவிட் நெருக்கடியை எதிர்கொள்ளும், பொருளாதாரத்தில் வேலைகள் தேவைப்படும் வீட்டுப் பணியாளர்களுக்கும், அவர்களின் சேவைகள் தேவைப்படும் மலேசிய முதலாளிகளுக்கும் பயனளிக்கும் என்று கூறினார்.

இதற்கிடையில், மலேசியா ஒரு  நாட்டை மட்டுமே சார்ந்திருக்க முடியாது என்பதால், வீட்டுப் பணிப்பெண்கள் உள்ளிட்ட தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது குறித்து ஆலோசிக்க விரைவில் கம்போடியாவுக்குச் செல்வதாகவும் அவர் கூறினார்.

இன்றுவரை நாட்டில் 1,054 கம்போடியத் தொழிலாளர்கள் இருப்பதாகவும், 1,003 பேர் வீட்டுப் பணிப்பெண்கள் என்றும் அவர் கூறினார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிராக எந்தவிதமான பாகுபாடும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார், ஏனெனில் அவர்களும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு இணையான வசதிகளைப் பெற்றுள்ளனர்.