தாமான் யூ அரசு கிளினிக்கில் 24 மணிநேர சேவை தேவை – பி.எஸ்.எம். மீண்டும் வலியுறுத்து

பி.ஆர்.என். ஜொகூர் | கோத்தா இஸ்கண்டார் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வேட்பாளர் அரங்கண்ணல் இராஜூ, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, பி.எஸ்.எம். நூசாஜெயா கிளை முன்மொழிந்த ஸ்கூடாய், தாமான் யூனிவர்சிட்டி (தாமான் யூ) அரசு சுகாதாரக் கிளினிக்கில் 24 மணிநேர சேவை தேவை எனும் கோரிக்கையை வலியுறுத்தினார்.

நேற்று மாலை, அந்த அரசு சுகாதாரக் கிளினிக்கின் முன் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் இந்தக் கோரிக்கையை மீண்டும் முன்வைத்தார். பி.எஸ்.எம். தேசியத் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமாரும் அவருடன் இருந்தார்.

தாமான் யூ அரசு மருத்துவமனை கோத்தா இஸ்கண்டார் தொகுதியில் அமைந்துள்ளது. சுமார் 100,000 சுற்றுவட்டார மக்கள் இந்தக் கிளினிக்கின் மருத்துவச் சேவையை நம்பியுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பி40, எம்40 குழுவினர் ஆவர்.

தாமான் யூ தவிர, அதனைச் சுற்றியுள்ள மேலும் 8 குடியிருப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கிளினிக்கையே நம்பியுள்ளதாக அரா என்று அழைக்கப்படும் அரங்கண்ணல் தெரிவித்தார்.

“இந்தக் குடியிருப்புப் பகுதிகள் அதிவேக வளர்ச்சி கண்டு வருவதால், குடியிருப்பாளர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, சுற்றுவட்டார மக்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, தாமான் யூ அரசு கிளினிக்கின் அவசரப்பிரிவு மற்றும் ஆம்புலன்ஸ் சேவையை 24 மணிநேரமும் வழங்க வேண்டுமென நாங்கள் கோருகிறோம்,” என்று மலேசியாகினியிடம் அரா தெரிவித்தார்.

இந்தக் கோரிக்கை இப்போது, இந்த மாநிலத் தேர்தலின் போது முன்மொழியப்பட்ட ஒன்றல்ல என்று அரா சொன்னார்.

“கடந்த 2016-ஆம் ஆண்டிலேயே, நூசாஜெயா கிளை இந்தக் கோரிக்கையை முன்வைத்து, சுற்றுவட்டார மக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தி, ஜொகூர் பாரு மாவட்டச் சுகாதார அலுவலகத்தில் ஒரு மனுவைச் சமர்ப்பித்துள்ளது.

“குறிப்பாக, இந்த வட்டாரத்தில் ஆம்புலன்ஸ் சேவை கட்டாயத் தேவையாக உள்ளது. தற்சமயம் இவ்வட்டார மக்கள் ஆபத்து அவசர வேளைகளில் ஜொகூர் பாரு சுல்தானா அமீனா அல்லது கூலாய், சுல்தான் இப்ராஹிம் பொது மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ் சேவையை நம்பியிருக்க வேண்டியுள்ளது.

“இவ்விரு பொது மருத்துவமனைகளும் தூரத்தில் அமைந்திருப்பதால், நெரிசல் மிகுந்த மத்தியப் பகுதியான கோத்தா இஸ்கண்டார் தொகுதிக்கு, அவர்களது சேவையை, குறிப்பாக ஆம்புலன்ஸ் சேவையை விரைந்து தர இயலாமல் இருக்கிறது.

“விபத்துக்குள்ளாகும் நபர்கள், குறிப்பாக இரவு நேரத்தில் உடனடி மருத்துவச் சேவை தேவைபடும் இப்பகுதி மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.  எனவே, தாமான் யூ அரசு கிளினிக்கில் இந்தச் சேவை கண்டிப்பாக இருக்க வேண்டுமென நாங்கள் கோருகிறோம்.” என அவர் விளக்கப்படுத்தினார்.

இங்குப் பொது போக்குவரத்து வசதிகளும் சரிவர இல்லாததால், வாடகை கார் அல்லது கிரேப் போன்ற போக்குவரத்துக்கு இங்குள்ள மக்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் சொன்னார்.

அதுவும் இரவு நேரங்களில் கட்டணம் இரு மடங்காக இருப்பதால், சில சமயங்களில் போக்குவரத்துக்காக கடன்கூட வாங்க வேண்டியுள்ளது என்றார் அவர்.

“இந்தக் கிளினிக் மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது. பல்கலைக்கழகக் கிளினிக்கால், அடிப்படை முதல் உதவிகளை மட்டுமே வழங்க முடியும் என்பதால், அங்குள்ள மாணவர்கள் அவசர வேளைகளில் சிகிச்சை பெறவும் இது தேவையாக இருக்கிறது,” என்றும் அவர் கூறினார்.

இந்தக் கோரிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து சுமார் 6 ஆண்டுகள் கடந்தும், இதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என அரா வருத்தம் தெரிவித்தார்.

எனவே, கோத்தா இஸ்கண்டார் சட்டமன்ற உறுப்பினராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தப் பிரச்சனையை மீண்டும் மாநிலச் சட்டமன்றத்தில் எழுப்பவுள்ளதாக அவர் சொன்னார்.

சில ஆண்டுகளுக்கு முன் அரசு மருத்துவமனைகளில் தனியார் பிரிவுகளைத் திறப்பதற்குக் கண்டனம் தெரிவித்து, பி.எஸ்.எம். நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தது. அதற்காக தயாரிக்கப்பட்ட மனுவை, ஜொகூர் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் பி.எஸ்.எம். நூசாஜெயா வழங்கியது குறிப்பிடத்தக்கது