பி.எஸ்.எம். : சார்புநிலையையும் சமத்துவமின்மையையும் உடைக்க வேண்டும்!

மகளிர் தின சிறப்பு செய்தி | இவ்வாண்டு சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டக் கருப்பொருள், “சார்புகளை உடைக்கவும்” என்பதாகும். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பாலினச் சார்புகளுக்கு விழிப்புணர்வைக் கொண்டுவருவதையே இக்கருப்பொருள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பாலினம், நிறம், தேசியம், உயரம், அடையாளம், உடல் ஊனம், பாலுணர்வு போன்றவற்றின் அடிப்படையில் நம்மைச் சுற்றி பாரபட்சங்கள் உள்ளன, இந்தப் பட்டியல் மேலும் நீண்டு கொண்டே செல்கிறது. பாலினப் பாகுபாடு நடப்பதைக் காணும்போது, அதனை மறுபரிசீலனை செய்யவும், அதற்கெதிராகக் குரல் கொடுக்கவும் #ஒருபக்கச்சார்புகளை உடைப்போம் (#BreaktheBias) ஊக்குவிக்கிறது, நமது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் நம்மையே அது பொறுப்பேற்கச் செய்கிறது.

‘பாலினச் சார்பு’ என்பது, ஆண்களில் இருந்து பெண்கள் வித்தியாசமாக நடத்தப்படுவதையும், பெண்களின் திறன் பல அம்சங்களில் அடக்கப்படுவதையும் குறிக்கிறது. ஒரு பக்கச் சார்பு என்பது வேண்டுமென்றே நடந்தாலும் அல்லது அது ஆழ் மனதில் இருந்தாலும்கூட, பெண்களுக்குக் கிடைக்கக்கூடிய பல வாய்ப்புகளையும் அங்கீகாரத்தையும் தடுப்பதன் மூலம், பெண்கள் அவர்களது முழு திறனை அடைவதையும் வெளிபடுத்துவதையும் அது தடுக்கிறது.

2020-ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) ஓர் ஆய்வை வெளியிட்டது; அதில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு ஆண்களும் பெண்களும் பெண்களுக்கு எதிராக சில சார்புகளைக் காட்டுகிறார்கள், இது பெண்களுக்கு நிறைய தடைகளையும் தடங்கல்களையும் உருவாக்குகிறது.

75 நாடுகளின் தரவுகளையும் உலக மக்கள்தொகையில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோரையும் உட்படுத்திய பாலினச் சமூக விதிமுறைகள் குறியீட்டில் (ஜி.எஸ்.என்.ஐ.), சமூக நம்பிக்கைகள் எவ்வாறு அரசியல், வேலை மற்றும் கல்வி போன்ற பகுதிகளில் பாலினச் சமத்துவத்தைத் தடுக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த ஜி.எஸ்.என்.ஐ. அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள பரந்த அதிகார இடைவெளியைப் பற்றியக் கவலைகளை எழுப்புகிறது.

இன்றும் கூட, மலேசிய நாடாளுமன்றத்தில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.) ஆண் எம்.பி.-களால் பாலியல் அவதூறுகளுக்கு ஆளாகின்றனர். அந்தப் பாலியல் துன்புறுத்தலுக்கு மத்தியில், தங்கள் குரல் எதிரொலிக்க அவர்கள் கடினமாகப் போராட வேண்டியுள்ளது. இந்நிலையில், பணியிடத்திலும் பொது இடங்களிலும் பாலினத் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சாதாரணப் பெண்களின் குரல்களைக் கேட்கவோ அல்லது அவர்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தவோ முயற்சிக்கும் பெண்களின் கதி என்னவென்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

ஒட்டுமொத்தமாக, நமது மலேசிய சமூகம் ஒரு பக்கச்சார்பு, பாலியல், பெண் வெறுப்பு, சமத்துவமற்ற மற்றும் உணர்வற்ற ஒரு சமூகம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய பாலினப் பாத்திரங்கள், நெறிமுறைகள் மற்றும் அவற்றை வடிவமைக்கும் சக்தியின் அடிப்படை ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வு ஆழமாக வேரூன்றி உள்ளது. நமது சிந்தனை, செயல்முறை, பணி விதிமுறைகள் மற்றும் தொடர்புகளில் இது வெளிப்படுத்தப்படுகிறது. ஆண்கள் மற்றும் சிறுவர்களுடன் ஒப்பிடுகையில், பெண்களும் சிறுமிகளும் பொது வாழ்க்கையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவதில் இது கணிசமான ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது.

மலேசியச் சமூகம் எல்.ஜி.பி.தி.கியூ.ஐ.+ (LGBTQI+) தனிநபர்கள் (பெண் இணையர் – Lesbian , ஆண் இணையர் – Gay , இருபால் இணையர் -Bisexual, பால்மாறியவர் – Transgender, புதுமர் – Queer [தாங்கள் என்ன பாலினத்துக்குள் அடங்குவோம் என்ற முடிவுக்குள் வராதவர்கள்] , இடையிலிங்கம் – Intersex [பிறக்கும்போதே ஆண் இனப்பெருக்க உறுப்போ பெண் இனப்பெருக்க உறுப்போ முழுமையாக வளர்ச்சியடையாமல் இருபாலின இனப்பெருக்க உறுப்புகள் ஒருங்கே அமைந்த குழந்தைகள்]) உட்பட சமூகத்தின் சில பிரிவினரை ஓரங்கட்ட, பல ‘நெறிமுறைகளை’ நிலைநிறுத்தி வருகிறது. மலேசியாவில் உள்ள பெண்களுக்கு, குறிப்பாக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள், ஒதுக்கப்பட்ட மற்றும் குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்குச் சமமான பிரதிநிதித்துவம், பொது முடிவெடுக்கும் செயல்பாட்டில் பாலின சமநிலை மற்றும் பக்கச்சார்புக்கு முடிவு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதால், இந்த ஆண்டு சர்வதேசப் பெண்கள் தினத்தின் கருப்பொருள் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

சார்புநிலை என்பது நம் அனைவரின் ஆழ்மனதிலும் உள்ளது, இது ஒரு பெரிய பிரச்சனை. அதை உணர்ந்து, பணியிடத்திலும், வீட்டிலும், நாடாளுமன்றத்திலும், நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் பெண்களைப் பாரபட்சமாகப் பேசுவதை நிறுத்த அனைவரையும் ஊக்கப்படுத்த வேண்டிய நேரம் இது.

மார்ச் 8, பாலினத்தைப் பொருட்படுத்தாமல், மலேசியாவிலும் உலக அளவிலும் பெண்களின் போராட்டத்தைப் பற்றி சிந்திக்கவும் கொண்டாடவும் வேண்டிய ஒரு தருணம் சர்வதேச மகளிர் தினம் ஆகும். ஒன்றாக, நாம் அதை மேலும் முன்னெடுத்துச் செல்வோம்; பெண்களின் உரிமைகளை ஆதரிப்போம். பாலினச் சமத்துவம் என்பது கற்பனைக்கும் கனவு காணவும் மட்டும் அல்ல; இது ஒரு கூட்டுப் பொறுப்பு; அது பெண்களின் பிரச்சினை மட்டுமல்ல, மனிதப் பிரச்சினை.

அனைவருக்கும் மலேசிய சோசலிசக் கட்சியின் சர்வதேச மகளிர் தின வாழ்த்து.


நளினி ஏழுமலை

பாலினப் பணியகம், மலேசிய சோசலிசக் கட்சி