முன்கூட்டியே கலைப்பு இல்லை – ஹரப்பான் மாநில அரசுகள் முழு பதவிக்காலம் வகிக்கும்

பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான சிலாங்கூர், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் மாநில அரசுகள் 2023 வரை தங்கள் முழு பதவிக்காலத்தை வகிக்கும்.

அபாய வெள்ளம், கோவிட்-19 தொற்றுநோய், வருமானம் வீழ்ச்சி மற்றும் வாழ்க்கைச் செலவில் உயர்வு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

“தற்போதைக்கு, ஒவ்வொரு முயற்சியும் மக்களைக் காப்பாற்றுவதிலும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்,” என்று ஜனாதிபதி சபை வலியுறுத்துகிறது.

கூட்டறிக்கையில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், அமானா தலைவர் முகமட் சாபு, டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் மற்றும் ஐக்கிய முற்போக்கு கினாபாலு அமைப்பின் (Upko) தலைவர் வில்பிரட் மேடியஸ் டாங்கவ்(Wilfred Madius Tangau) ஆகியோர் கையெழுத்திட்டனர்.

PAS-ன் கட்டுப்பாட்டில் உள்ள கிளந்தான், திரங்கானு மற்றும் கெடா ஆகிய மாநிலங்கள் குறித்து PAS பொதுச்செயலாளர் தகியுதீன் ஹாசான் (Takiyuddin Hassan) இன்று இதேபோன்ற அறிக்கையை வெளியிட்டார்.

விரைவில் அங்கு மாநில தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் மாநில சட்டசபைகள் கலைக்கப்படாது என்றும் அக்கட்சி முடிவு செய்துள்ளது.