புத்ராஜெயா அகதிகள் மலேசியாவில் பணிபுரிய அனுமதிப்பது குறித்த வழிகாட்டுதலை உருவாக்கி வருவதாகவும், மனிதவள அமைச்சகம் இந்த விஷயத்தை ஆய்வு செய்ய ஒரு குழுவை வழிநடத்தி வருவதாகவும் அதன் அமைச்சர் எம் சரவணன் கூறினார்.
நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், அகதிகளுக்கான பொருத்தமான துறைகளை தனது அமைச்சகம் ஆய்வு செய்யும் என்றும், அவர்கள் பணிபுரிய அனுமதிப்பது மலேசியர்களின் வேலை வாய்ப்புக்கு போட்டியாய் அமைய வழிவகுக்காது என்றும் சரவணன் தெரிவித்தார்.
நாட்டிற்குள் நுழைவதற்கு ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையரின் அட்டைகளை வைத்திருக்கும் அதிகமான அகதிகளையும் மற்றும் புகலிடம் நாடுபவர்களையும் இது ஈர்க்கும் என்று அவர் கூறினார்.
இருப்பினும், இந்த வழிகாட்டுதல் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்து அமைச்சரால் எந்த காலக்கெடுவும் தெரிவிக்கப்படவில்லை.
“நாட்டில் உள்ள அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களின் நிர்வாகம் தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (MKN) உத்தரவு 23க்கு உட்பட்டது. இந்த உத்தரவு மேம்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் இது MKN கூட்டத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்.
“இப்போதைக்கு, UNHCR அட்டைகளைக் கொண்ட அகதிகள் தங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக முறைசாரா துறையில் வேலை செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். உத்தரவு 23 இல் செய்யப்பட்ட மேம்பாடுகள் மூலம், அகதிகள் வேலை செய்ய அனுமதிப்பது குறித்த வழிகாட்டுதல் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
“இந்த செயல்முறையின் மூலம், இணைத்து அகதிகளும் தேசிய தரவுத்தளத்தில் சேர்க்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த முடியும், மேலும் அவர்கள் தொடர்பான எந்த தகவலும் அவ்வப்போது புதுப்பிக்கப்படும்,” என்றும் அவர் கூறினார்.
வேலை செய்வதற்கான அனுமதி திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக UNHCR மற்றும் பிற பங்குதாரர்களுடன் ஒத்துழைக்க புத்ராஜெயா தயாராக இருப்பதாகவும் சரவணன் கூறினார்.
UNHCR அட்டைகளைக் கொண்ட அகதிகளை மலேசியாவில் முறையாகப் பணிபுரிய அனுமதிக்கும் அறிக்கைகள் பற்றி கேட்ட அஸ்லினா ஓஸ்மான் சைட் (BN-Pengerang) கேள்விக்கு இவ்வாறாக அவர் பதிலளித்தார்.
அகதிகள் நாட்டில் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஆர்வலர்களிடமிருந்து ஏராளமான அழைப்புகள் வந்துள்ளன, குறிப்பாக உள்ளூர் மக்கள் தவிர்க்க விரும்பும் துறைகளில் இவர்கள் வேலை செய்யலாம்.
-freemalaysiatoday