பிஏசி அறிக்கையைத் தொடர்ந்து MySejahtera பதிவு விகிதத்தில் சரிவு

MySejahtera செயலியானது கடந்த வியாழன் அன்று பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee-பிஏசி) செயலியின் பிஏசி உரிமையைப் பற்றிய சிக்கலை எழுப்பியதில் இருந்து உட்பதிவு விகிதத்தில் 26 விழுக்காடு  அல்லது 6.3 மில்லியன் குறைவாக பதிவாகியுள்ளது.

பிஏசி அறிக்கையானது பயனர் தரவின் பாதுகாப்பு மற்றும் செயலியின் மேம்பாட்டில் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பிய பின்னர் உட்பதிவு எண்ணிக்கையில் சரிவு பதிவு செய்யப்பட்டது.

சுகாதார அமைச்சின் GitHub இணைய முகப்பில் MySejahtera வின் பயன்பாடு குறித்த தரவு வெள்ளிக்கிழமை (மார்ச் 25) 24,358,225 உட்பதிவுகளை பதிவு செய்துள்ளதாக பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . சனிக்கிழமை 20,106,659 ஆகவும், ஞாயிற்றுக்கிழமை 19,279,238 ஆகவும் குறைந்துள்ளது.

திங்கட்கிழமை உட்பதிவு 18,038,569 என்று நாளிதழ்கள் தெரிவித்துள்ளது, இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதிக்குப் பிறகு மிகக் குறைவு.

பிஏசி தனது அறிக்கையில், தொடர்புத் தடமறிதல் முயற்சிகளை எளிதாக்கும் நோக்கத்திற்காக இந்த செயலி உருவாக்கப்பட்டது என்றும், அரசாங்கத்திற்கும் செயலியை உருவாக்கிய நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் இல்லாமல் உருவாக்கப்பட்டது என்றும் கூறியுள்ளது.

இந்த செயலியை நிர்வகிப்பதற்கு MySJ Sdn Bhd என்ற புதிய நிறுவனத்தை நியமிப்பதற்கான நேரடி பேச்சுவார்த்தை மூலம் ஒரு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையும் அறிக்கை வெளிப்படுத்தியது.

சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதடின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், சுகாதார அமைச்சகம் இந்த செயலியை ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்கவில்லை என்றும், இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, அமைக்கப்பட்டுள்ள தரவு ஆளுமை தரநிலைகளின்படி, பயனர் தரவு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

“MySejahtera வின் தரவுகளின் பயன்பாடு மற்றும் மேலாண்மை தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் 1988 சட்டம் 342, மருத்துவ சட்டம் 1971 மற்றும் சர்வதேச தரங்களுக்கு இணங்க வேண்டும்.

“அதனால், செயலியின் தரவை சுகாதார அமைச்சகம் எந்த அரசு நிறுவனத்துடனும் அல்லது தனியார் துறையுடனும் பகிர்ந்து கொள்ளாது.

“உண்மையில், MySejahtera விலிருந்து தரவு பரிவர்த்தனைகள் ஒவ்வொரு நாளும் கிளவுட் சர்வர் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன, மேலும் MySejahtera பயன்பாடுகளைப் பயன்படுத்த மட்டுமே அணுக முடியும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

-freemalaysiatoday