“அது தியோ பெங் ஹாக் விவகாரத்தைப் போல இருந்தால் அவர்கள் எதனையும் விட்டு வைக்க மாட்டார்கள். அந்த விவகாரத்தை ஆழமாக தீவிரமாக ஆராய்வர்.”
எம்ஏசிசி ஊழலைப் பார்த்துக் கண்ணை மூடிக் கொள்கிறது
அலக்ஸ் ஜெப்ரி நாதன்: அபு காசிம் முகமட், குறிப்பிட்ட ஒரு வேலையைச் செய்வதற்காக எம்ஏசிசி தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதிகார அத்துமீறல், ஊழல் நடைமுறைகள், அக்கறையுள்ள குடிமக்களிடமிருந்து அம்னோ/பிஎன் தலைவர்கள் மீது ஊழல் புகார்கள், அம்னோ தலைமைத்துவத்துடன் தொடர்புடையவர்களுக்கு வர்த்தகக் கடன்கள் என்னும் போர்வையில் வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான ரிங்கிட் மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சுவது ஆகியவை பற்றி ஏதும் செய்யாமல் இருப்பதுதான் அந்த வேலை.
உண்மையில் அவர் அந்த வேலையை நன்றாகச் செய்து கொண்டிருக்கிறார். மக்கள் வரிப்பணத்தில் தங்களை பணக்காரர்களாக்கிக் கொள்வதற்கு அம்னோபுத்ராக்களுக்கு வழங்கப்பட்ட கணக்கு வழக்கற்ற வர்த்தகக் கடன்களில் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனமும் ஒன்றாகும்.
ஹலோ: நாம் நேர்மையாக இருக்க வேண்டும். எம்ஏசிசி என்றால் “மலேசியா ஊழல் மையத்தை ஏற்றுக் கொள்கிறது” என உலகிற்கு அறிவிக்க வேண்டும் ( MACC stands for ‘Malaysia Accepts Corruption Centre’ ).
2009ம் ஆண்டு 150 பில்லியன் ரிங்கிட் கள்ளத்தனமாக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக உலக நிதி நேர்மை (ஜிஎப்ஐ) அமைப்பு அறிவித்துள்ளதற்கு அதுதான் காரணம்.
உலகில் சட்டவிரோதமாக மூலதனம் வெளியேறும் நாடுகளின் பட்டியலில் மலேசியா ஐந்தாவது இடத்தை வகிக்கிறது. அதில் பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை. உண்மையில் எம்ஏசிசி அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்.
கேகன்: பொதுக் கடனைத் தவறாகப் பயன்படுத்துவது ஊழல் இல்லையா? அப்படியானால் ஊழல் என்றால் என்ன? எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டால் மட்டும் தானா? ஊழல் தமது முகத்தைப் பார்த்து முறைத்துக் கொண்டிருக்கும் போது ஊழல் இல்லை எனக் கூறுவதற்காக அபு காசிம் வெட்கப்பட வேண்டும்.
சுல்கெப்லி அகமட்: தியோ பெங் ஹாக் அரச விசாரணை ஆணைய விசாரணையின் போது சிலாங்கூர் எம்ஏசிசி அதிகாரிகள் ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அதற்காக அரசாங்க வசதிகளைத் தவறாக பயன்படுத்தியுள்ளனர்.
அவர்களுடைய பெருந்தலைவர் அது குறித்து கிஞ்சித்தும் கவலைப்பட்டதாகத் தெரியவே இல்லை. மலேசியா போன்ற ஒரு முஸ்லிம் நாட்டில் அது நிகழ்ந்திருப்பது வெட்கத்தைத் தருகிறது.
அந்த அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரச விசாரணை ஆணையத்தை அமைப்பதில் மக்கள் வரிப்பணம்தான் விரயமாகியுள்ளது.
மக்கள் மேலாண்மை: அந்த விவகாரங்களில் மூத்த அமைச்சர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். எம்ஏசிசி அதனைத் தவிர்ப்பதற்கு அதுவே காரணம். அது தியோ பெங் ஹாக் விவகாரத்தைப் போல இருந்தால் அவர்கள் எதனை விட்டு வைக்க மாட்டார்கள். அந்த விவகாரத்தை ஆழமாக தீவிரமாக ஆராய்வர்.