இன பாகுபாடு பார்த்த ஊழியர் மீது உடனடி நடவடிக்கை – Mr DIY

வீட்டு மேம்பாடு பொருட்களின் சில்லறை விற்பனையாளரான Mr DIY  மலேசியா, இனத்தின் அடிப்படையில் வேலை தேடும் பெண்ணைத் திருப்பி அனுப்பிய  ஊழியரின் நடத்தைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

டிக்டோக் பயனாளி @itsbrownbarbie, சிலாங்கூர் பாங்கியில் உள்ள Mr DIY  கிளையின் ஊழியர் ஒருவர் இந்தியர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டினார் என்று குற்றம் சாட்டியதை அடுத்து இது வெளியிடப்பட்டுள்ளது.

அவரது சகோதரி வேலை தேடுவதற்காக Mr DIY கடைக்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக அவர் கூறியுள்ளார்.

“நானும் என் சகோதரியும் கடைக்குச் சென்றோம், உடனடியாக Mr DIYயின் மேலாளர் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த விரும்பவில்லை என்று கூறினர்,” என்று அவர் புகார் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.

“இதை செய்யாதீர்கள்.கருமை நிறத்தில் பிறந்த காரணத்தால் நீங்கள் அவரை புண்படுத்திவிட்டீர்கள்.”

பத்திரிகைக்கு அளித்த அறிக்கையில், புகார் மீது நிறுவனம் உடனடி மற்றும் முழுமையான உள் விசாரணையை நடத்தியதாக Mr DIY தரப்பு தெரிவித்துள்ளது.

“குறிப்பிட்ட பணியாளரின் நடத்தையை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். இது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் பன்முகத்தன்மை  உள்ளடக்கம் குறித்த எங்கள் கொள்கையை மீறுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து வருத்தம் தெரிவிக்க பாதிக்கப்பட்ட நபரை அணுகியதாகவும், பின்னர் மன்னிப்பு கேட்டதாகவும் நிறுவனம் கூறியது.

“பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் பற்றிய எங்கள் கொள்கையை மீறும் எந்த நடத்தையையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்பதையும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க எல்லா முயற்சிகளையும் எடுப்போம் என்பதையும் Mr DIY மீண்டும் வலியுறுத்தியது.

“நாங்கள் ஒரு சம வாய்ப்பு அளிக்கும் மற்றும் பெருமைக்குரிய மலேசிய நிறுவனம்” என்று கூறியுள்ளது.

-freemalaysiatoday