அன்வார்: உலக வங்கியிடம் உதவி கேட்டார் மகாதிர்

1999 நிதி நெருக்கடியின்போது அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் உலக வங்கியிடம் பண உதவி கேட்டுக் கடிதம் எழுதினார் என்ற திடுக்கிடும் தகவலை மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வெளியிட்டுள்ளார்.

நேற்றிரவு வெளிநாட்டுத் தூதர்கள் கலந்துகொண்ட ஒரு விருந்து நிகழ்வில் உரையாற்றிய அன்வார், தம்மை “அமெரிக்காவின் கையாள்” என்று அம்னோவும் மகாதிரும்  குத்திவைத்திருந்த முத்திரையை உடைத்தெறியும் முயற்சியில் ஈடுபட்டார். 1993 நிதி நெருக்கடியின்போது நிதி அமைச்சர் என்ற முறையில் உலகப் பொருளகத்தின் நிதி உதவியை வேண்டாம் என்று கூறி அதற்குக் கடிதம் எழுதியதாக அவர் கூறினார்.

“பன்னாட்டு பண நிறுவனம், உலக வங்கி ஆகியவற்றின் கூட்டம் என் தலைமையில் நடந்தது. அதற்காக என்னை அமெரிக்காவின் கையாள் என்று கூறிவிட்டார்கள். ஆனால், 1993-இல் உங்கள் பணம் எங்களுக்குத் தேவையில்லை என்று உலக வங்கிக்கு கடிதம் எழுதியதே நான்தான்.

“1999-இல், அப்போதைய பிரதமர் மகாதிர் அதே உலக வங்கியிடம் கடன் கேட்டு விண்ணப்பம் செய்தார்”, என்று அன்வார் கூறினார்.

சிலாங்கூர்  அரசு அந்த விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. வெளிநாட்டுத் தூதர்கள், பொருளியல் வல்லுனர்கள், கல்வியாளர்கள், எம்பிகள், கட்சித் தலைவர்கள், செய்தியாளர்கள் எனச் சுமார் 150 பேர் கலந்துகொண்டிருந்த அவ்விருந்தில் அன்வார்  ‘Debunking ETP: Widening Income Gap’ என்ற தலைப்பில் உரையாற்றினார். 

1999-இல் தாம் சிறையில் இருந்ததால் மகாதிர் உதவிகேட்ட விவரம் தெரியாது என்றும் விடுதலையாகி உலக வங்கியில் ஆலோசகர் பணியாற்றியபோதுதான் அதைக் கண்டுபிடித்ததாகவும் அன்வார் கூறினார்.

“என்னவொரு முரண்பாடு பார்த்தீர்களா? உலக வங்கியின் அடிவருடி என்று கூறப்பட்ட இந்த அன்வார், உலக வங்கியின் உதவி வேண்டாம் என்றேன். ஆனால், உலக வங்கிக்கு எதிர்ப்பானவர் என்று கூறப்பட்டவர் கமுக்கமாக உலக வங்கியிடம் கடன் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார்.”

1993இலிருந்து 1998வரை மகாதிர் ஆட்சியில் அன்வார்தான் நிதி அமைச்சராக இருந்தார்.ஆனால், 1997 நிதி நெருக்கடியின்போது அவர்களின் உறவு மோசமடைந்தது.முடிவில் அன்வார் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அதன்பின்னர் அவர் குதப்புணர்ச்சி மற்றும் அதிகார அத்துமீறல் குற்றம் சுமத்தப்பட்டு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு 2004 வரை சிறையில் இருந்தார்.

அப்போதுதான் மகாதிர், தம்மை மேலைநாட்டுகளின் ஏகாதிபத்திய போக்கை எதிர்க்கும் தலைவராகக் காட்டிக்கொண்டு அன்வார் பன்னாட்டு பண நிறுவனத்தின் உதவியைப் பெற்று நாட்டை விற்பதற்கு முயற்சி செய்கிறார் என்று குற்றம் சாட்டினார்.