தமிழ்வழி கல்வி கட்டமைப்பைச் சிதைக்கும் இருமொழி (டி.எல்.பி) பாடத்திட்டத்தை மீண்டும் தமிழ்ப்பள்ளிகளில் திணிக்க முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. அதனைத் தடுக்க தமிழ்ப்பள்ளி பெற்றோர்கள் விழிப்புநிலை கொள்ள வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
2003-ஆம் ஆண்டில் கணிதம் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கும் (பி.பி.எஸ்.எம்.ஐ. – PPSMI) திட்டத்தை அறிமுகப்படுத்தி, அது தோல்வியடைந்ததாக 2012-இல் மலேசியக் கல்வி அமைச்சு அறிவித்தது. தோல்வியடைந்த ஒரு திட்டத்தை தற்பொழுது வேறு ஒரு பெயரில் ஒரு துணை திட்டமென்று டிஎல்பியாக அமுல்படுத்துவதில் நேர்மையும் நன்மையும் அறவே இல்லை என அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.
2018-ஆம் ஆண்டில், இந்த இருமொழி பாடத்திட்டத்தைக் கொல்லைப்புற வழியாக திணித்த போது பெரும்பான்மை தமிழ்ப்பள்ளிகள் அதனைப் புறக்கணித்ததை நாமறிவோம். மீண்டும் அதே திட்டத்தைத் தற்போது முதலாமாண்டு மாணவர்களுக்குச் சத்தமில்லாமல் அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு முயல்கிறது என்றார் பாலமுருகன்
ஒரு மாணவனின் தொடக்கக்கல்வி அவன் தாய்மொழி வழி இருக்கும் போதுதான், அவன் கற்கும் பாடத்தில் ஆளுமையும் புரிதலும் மேம்படும். மாறாக, வேற்று மொழியில் இருந்தால் அப்பாடம் புரியாமலும் பிடிக்காமலும் போகும். அதுமட்டுமின்றி, மன உளைச்சலும் ஏற்றத்தாழ்வும் உருவாவதோடு, கல்வி மாணவர்களுக்கு ஒரு சுமையாகவும் கூட ஆகிவிடும்.
இந்த இருமொழி பாடத்திட்டத்தால் தமிழ்மொழியின் பயன்பாடு குறையும், கலைச்சொற்கள் அழியும், தமிழில் ஆங்கிலக் கலப்பு ஏற்படுவதோடு; தமிழ்மொழியில் கணிதம் அறிவியல் புத்தகங்கள் வெளிவராது.
மேலும், தமிழ்வழிக்கல்வி கட்டமைப்பு சிதையும், தமிழ் தொடர்பு மொழியாக இருக்கும் நிலை மாறும், தமிழ்ப்பள்ளியில் தமிழ் ஒரே பாட மொழியாக ஆகக்கூடும், தமிழ்ப்பள்ளியின் தனி அடையாளம் அழிந்து போகும், தமிழாசிரியர்கள் எண்ணிக்கை குறையும் பிற இன ஆசிரியர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பப்படலாம், எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளிகள் அனைத்தும் மூடப்படலாம் அல்லது தேசியப்பள்ளிகளாக மாற்றப்படலாம் என அவர் எச்சரித்தார்.
“கணிதமும் அறிவியலும் ஆங்கிலத்தில் போதிக்கும் இந்த இரு மொழித் திட்டத்தை ஏற்றால், மேனாட்டு மோகமுடைய பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவர் என்ற நம்பிக்கையில் சில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இத்திட்டத்தை வரவேற்கின்றனர். ஆனால், பின்னாளில் வேறு இன ஆசிரியர்கள் நியமிக்கும் போது நம் இனத்திற்கான வேலை வாய்ப்பு, உயர்க்கல்வி வாய்ப்பு, பொருளாதார வாய்ப்பு அனைத்தும் பறிபோகும் என்பதை அவர்கள் உணர மறுக்கின்றனர்.
“அதோடு, தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றும் நமது ஆசிரியர்கள் எண்ணிக்கையும், ஆசிரியர்களைக் கண்காணிக்கும் தமிழ் அதிகாரிகள், உதவி இயக்குநர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து, காலப்போக்கில் அறவே இல்லாமல் போகும் பரிதாப நிலைமை உருவாகலாம் என்பதையும் மறந்துவிடாதீர்கள்,” என்றார் அவர்.
ஆங்கில மொழி அவசியம் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. அந்த மொழியின் மீதான ஆற்றலை மேம்படுத்த வேண்டுமெனில் ஆங்கில மொழியைக் கற்பிக்கும் நேரத்தைக் கூட்ட வேண்டும் அல்லது ஆங்கிலப் பாடத்தைக் கற்பிக்க சிறப்பு வகுப்பு, தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதைவிடுத்து, மற்ற பாடங்களில் ஆங்கிலத்தில் மாற்றுவது ஏற்புடையதாகாது என அவர் மேலும் சொன்னார்.
நமது நாட்டின் பிரதமரே, இனி வெளிநாடுகளில் தேசிய மொழியைப் பயன்படுத்த வேண்டுமென்று சொல்லும்போது, அவர் தலைமையிலான கல்வியமைச்சு ஆங்கிலத்தைத் திணிப்பது வேடிக்கையாக இருக்கிறது என்றார் பாலமுருகன்.
“உலகக் கல்வி நிறுவனமாகிய யுனெசுகோவின் பரிந்துரையின்படி தொடக்கக் கல்வி மாணவர்கள் அனைவரும் அவரவர் தாய்மொழியிலேயே கல்வியைக் கற்க வேண்டும். தாய்மொழி உரிமை அவரவர் பிறப்புரிமை. மலேசிய அரசமைப்புச் சட்டத்திலும் தாய்மொழி உரிமை பற்றி மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தமிழ்ப்பள்ளிகளில் மலாய், ஆங்கிலம் தவிர மற்ற அனைத்து பாடங்களும் தமிழிலேயே இருக்க வேண்டும்.”
நமது தமிழ் வழி கல்விக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் எதிராக வரும் இந்த இருமொழி பாடத்திட்டத்தை, நாட்டிலுள்ள அனைத்து பெற்றோர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், பள்ளி வாரிய குழுக்கள், முன்னாள் மாணவர் சங்கங்கள் மற்றும் தமிழர் தேசிய இயக்கங்கள், தமிழ் ஆர்வலர்கள், பற்றாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வேண்டுகோள் விடுப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.