நஜிப் ஒப்புதல் அளித்த 50 மில்லியன் கானல் நீரா? விரைவில் தீர்வுகாண வேண்டும்

சில நாட்களுக்கு முன்பு இரம்பாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு வழங்கப்பட்ட நிதி என்ன ஆனது என்று அப்பள்ளியின் வாரிய உறுப்பினர் கேள்வியினால் கிணறை வெட்ட பூதம் கிளம்பிய கதையானது தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு மாணியச் சிக்கல்.

செடிக்கின் முன்னாள் இயக்குநராக செயல்பட்ட முனைவர் இராசேந்திரன் சிறப்பு மாணியத் திட்டத்தை நம்பிக்கைக் கூட்டணி அரசு கிடப்பில் போட்டுவிட்டது என்று விளக்கமளிக்க, நம்பிக்கைக் கூட்டணியின் முன்னாள் கல்வித் துணையமைச்சர் தியோ நீ சிங் அது தேசிய முன்னணி அரசாங்கத்தின் தேர்தல் வெற்று வாக்குறுதி என்று விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து, தேசிய முன்னணி முன்னாள் துணைக் கல்வியமைச்சர் கமலநாதன் அன்றைய முதன்மராக இருந்த நஜிப்பின் ஒப்புதல் கடிதத்துடன் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார்.

2017 ஆம் ஆண்டில், 13 ஆவது பொதுத்தேர்தலில் வாக்களித்ததுபோல் அன்றைய முதன்மர் நஜிப், செடிக் மூலம் சிறப்பு நிதியாக 50.6 மில்லியனைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்க ஒப்புதல் கடிதம் வழங்கியிருந்தார் என்றும், அம்மாணியத்தின் வழி 124 தமிழ்ப்பள்ளிகளின் சீரமைப்பு, 3 தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய இடம், ஒரு தமிழ்ப்பள்ளிக்கு இணைக் கட்டடத்திற்குச் செலவிடப்பட வேண்டும் என்றும், 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25.3 மில்லியனும் 2018 இல் மீதத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார் என்றும் தெரிவித்தார்.

ஆனால், முன்னாள் முதன்மர் ஒப்புதல் அளித்ததுபோல், 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25.3 மில்லியன் நிதியமைச்சிலிருந்து தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு மாணியம் கல்வியமைச்சுக்குக் கொடுக்கப்படவில்லை. 14 ஆம் பொதுத் தேர்தல் நெருங்கிவிட்டதால் தேர்தலுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவுச் செய்துவிட்டதாக தன் ஊடகவியாளர் சந்திப்பில் முன்னாள் துணைக் கல்வியமைச்சர் கமலநாதன் தெரிவித்திருந்தார் என்று இணைய ஊடகம் தமிழ் லென்சு செய்தி வழியாக அறிந்துகொண்டோம்.

நம்பிக்கைக் கூட்டணியின் புதியத் துணைக் கல்வியமைச்சர் தியோ நீ சிங் அவர்களிடம், கமலநாதன் தன் பொறுப்பை ஒப்படைக்கும் போது தமிழ்ப்பள்ளிகளுக்கான 50.6 மில்லியன் சிறப்பு மாணியம் நிதியமைச்சில் இருப்பதாகவும் ஒரு கடிதம் எழுதி, அப்பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டதாகக் கூறியிருக்கிறார்.

ஆனால், அன்றையத் துணைக் கல்வியமைச்சர் அதைக் கண்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. அதன் பிறகு, அமைந்த இரு அரசாங்கங்களும் இந்தச் சிறப்பு மாணியத்தைப் பற்றிக் கண்டுக்கொள்ளவில்லை.

இப்படியே ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன என்பது வேதனைக்குரிய பற்றியமாகும். இந்தச் சிறப்பு மாணியம் இவர்கள் ஆட்சிக் காலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏன் வழங்கப்படவில்லை என்று முன்னாள் நிதியமைச்சர்களான நஜிப்பும் லிம் குவான் எங்கும்; முன்னாள் முதன்மர்களான நஜிப், துன் மகாதீர், முஹிடீன் யாசின் ஆகியோரும் விளக்கம் அளிக்க வேண்டும்.

இனியும் காலம் தாழ்த்தாது, மஇகாவின் தேசியத் தலைவர் விக்னேசுவரன் அவர்களும், அமைச்சரவையில் பங்கேற்றிருக்கும் மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் சரவணன் அவர்களும் தலையிட்டு, தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக முன்னாள் முதன்மர் நஜிப் ஒப்புதல் அளித்த 50.6 மில்லியனைத் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும்.

அதோடு, குமுகாய மக்கள் நிகராளியாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பேதமின்றி இந்தச் சிறப்பு மாணியத்தைப் பற்றி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்றும்; இந்நாள் நிதியமைச்சர் தெங்கு சப்ரால், முதன்மர் இசுமாயில் சப்ரி இருவரும் இந்தச் சிறப்பு மாணியத்தின் நிலை என்னவென்று விளக்கமளிக்க வேண்டுமாறு மலேசியத் தமிழர் தேசியப் பேரவை கோரிக்கை வைக்கிறது.


தமிழகரன் முனுசாமி, செயலாளர், மலேசியத் தமிழர் தேசியப் பேரவை