அண்மையில் ஜகார்த்தாவுடன் கைச்சாத்திடப்பட்ட புதிய ஒப்பந்தத்தில் இந்தோனேசியப் பணிப்பெண்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் குறித்த குழப்பம் குறித்து விளக்கமளிக்க முன்னாள் மனிதவள அமைச்சர் எம்.குல சேகரன் தற்போதுள்ள அமைச்சர் எம்.சரவணனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வீட்டுப் பணிப்பெண்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் பாதுகாப்பது தொடர்பாக மலேசியா மற்றும் இந்தோனேஷியா இடையேயான சமீபத்திய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) முக்கிய அங்கமாக இருப்பதால், பணிப்பெண்கள் வருவதற்குள் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று குலா கூறினார்.
மலேசியாவின் குறைந்தபட்ச ஊதியம் இன்னும் ரிம1,200 ஆக இருப்பதால், அரசாங்கம் ரிம1,500 சம்பளத்திற்கு உடன்படவில்லை என்று நேற்று சரவணன் கூறினார். இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் ரிம1,500 குறிப்பிடப்பட்டதாக இந்தோனேசிய தூதர் ஹெர்மோனோ கூறியிருந்தார்.
பணிப்பெண்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் ரிம1,500 அல்லது ரிம1,200 என்பதை தெளிவுபடுத்துவது சரவணனின் கடமை என்று குலா கூறினார்.
“ஒப்பந்தம் இருக்கும்போது இரு நாடுகளும் வெவ்வேறு சம்பள விகிதங்களைப் பற்றி ஏன் பேசுகின்றன? இது பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது,” என்று ஈப்போ பாரத் எம்.பி., இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பணியமர்த்துவதற்கான செலவு குறித்து,முதலாளிகள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது, செலவினங்களின் விரிவான விளக்கத்தை வழங்குவதன் மூலம் உண்மையான தொகையை “நேர்மையாகவும் வெளிப்படையாக” இருக்குமாறு விரிவான விளக்கம் தரக்கோரி சரவணனை வலியுறுத்தினார்.
புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்துவதற்கான செலவு ரிம9,000 இருந்து ரிம6,000 ஆகக் குறையும் என்று அவர் நேற்று கூறியதிலிருந்து, இரு நாடுகளைச் சேர்ந்த முகவர்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை முதலாளிகள் அறிய விரும்புவதாக குலா கூறினார்.
மலேசியாவில் தற்போதைய அதிக தேவையை பூர்த்தி செய்ய பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அரசாங்கம் பிற நாடுகளையும் பார்க்க வேண்டும் என்றார்.
“2018 ஆம் ஆண்டில், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அங்குள்ள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு நேபாளத்திலிருந்து பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்த அனுமதித்தது. ஆனால் ஷெரட்டன் நகர்வு காரணமாக எங்களால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியவில்லை.
“இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் ஒப்பந்தம் முடிவடையவில்லை. இது குறித்து மலேசியர்களுக்கு விளக்கம் அளிக்க அமைச்சர் கடமைப்பட்டுள்ளார்,” என்றார் அவர்.
பணிப்பெண்களை நாட்டிற்குள் கொண்டுவரும் ஒப்பந்தம் தொடர்பாக மலேசியர்களிடையே நிலவும் கவலையைத் தீர்க்க சரவணன் தெளிவாகவும் திட்டவட்டமான தீர்வு காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்துவதில் முறைகேடு மற்றும் ஊழல் இருப்பதாக மலேசியர்கள் மத்தியில் அதிக சந்தேகம் இருக்கும்போது, அவர் விவரங்களை மறைக்கக்கூடாது,” என்று அவர் கூறினார்.
-freemalaysiatoday