கசிந்த ஆவணங்கள் அம்னோவுடனான பாஸ் உறவை சேதப்படுத்த செய்த  சதி – அவாங் ஹாஷிம்

அம்னோவையும் பாரிசான் நேசனலையும் கவிழ்த்து சீர்குலைக்கும் சதித்திட்டத்தை  பாஸ் உருவாக்கியது என்று கசிந்ததாகக் கூறப்படும் ஆவணம், ஆரோக்கியமான நட்புறவை அனுபவிக்கும் இரு கட்சிகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சி என்று பாஸ் தலைவர் கூறுகிறார்.

“இது பாஸை அவதூறாகப் பேசுவதற்கும், பொறுப்பற்ற தனிநபரால் இரு தரப்பினருக்கும் இடையிலான உறவையும் தோழமையையும் சேதப்படுத்தும் ஒரு முட்டாள்தனமான முயற்சியைத் தவிர வேறில்லை” என்று பாஸ் மத்திய குழு உறுப்பினர் அவாங் ஹாஷிம் பத்திரிக்கையிடம்  கூறினார்.

“ஆவணங்களின் நம்பகத்தன்மையை நான் மறுக்க விரும்புகிறேன். மேலும் அப்படி ஒரு சதி நடைபெறவில்லை என்பதையும் ஒருமுறை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது முற்றிலும் போலியான மற்றும் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டு.”

கசிந்த ஆவணங்கள் பாஸ் கூட்டத்தின் அறிக்கை என நம்பப்படுகிறது, இதில் விசாரணையில் இருக்கும் அல்லது குற்றவியல் நம்பிக்கை மீறல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி போன்ற குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றுள்ள அம்னோ தலைவர்களின் தண்டனையை விரைவுபடுத்தும் திட்டமும் இதில் உள்ளது.

திரெங்கானு மந்திரி பெசார் மற்றும் பாஸ் துணைத் தலைவர் அஹ்மத் சம்சூரி மொக்தார், பாஸ் பொதுச்செயலாளர் தகியுடின் ஹாசன் மற்றும் பெர்சத்து தலைவர்கள் அஸ்மின் அலி மற்றும் ஹம்சா ஜைனுடின் உட்பட பல முக்கிய நபர்களுடன்  இந்த  சதித்திட்டங்கள் தொடர்புடையதாக உள்ளது.

அம்னோ தலைவர்களை கவிழ்க்க சதி இல்லை என்று சம்சூரி மறுத்துள்ளார், கசிந்த ஆவணங்கள் “குப்பை” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் பதிலத்துள்ளார்.

அத்தகைய ஆவணங்கள் எங்கிருந்து வந்தன என்பது கூட தனக்குத் தெரியாது என்றார் அவர்.

திரெங்கானு பாஸ் வெளியிட்ட முகநூல் நேரலை வீடியோவில், “இதுபோன்ற ‘குப்பை’ ஆவணங்களை மக்கள் நம்புகிறார்களா?” என்று அவர் கேட்டார்.

அதற்கு முன், அம்னோ உச்ச மண்ற  உறுப்பினர் அஹ்மட் ஷபேரி சீக், கசிந்த ஆவணங்கள் குறித்து தெளிவுபடுத்த பாஸ் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

தற்போதைய மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் தலைமைத்துவம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் என்பதால், அதில் உள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானதாக இருந்தால் உடனடியாக மறுப்பு வெளியிடுவது மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.

-freemalaysiatoday