அகதிகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டம் குறித்து அரசு ஆழ்ந்த ஆய்வு நடத்த வேண்டும்

பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டில் அகதிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் குறித்து மனிதவள அமைச்சகமும் உள்துறை அமைச்சகமும் ஆழ்ந்த ஆய்வை மேற்கொண்டு வருகின்றன

வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால், மலேசியாவுக்கு அதிக அகதிகள் வருவதைத் தடுக்க விரிவான ஆய்வு முக்கியமானது என்று மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன் கூறினார்.

“பாதுகாப்பு காரணி குறித்து, உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுதீனுடன் விவாதித்தேன். சரியான திட்டமிடல் இல்லாமல் வேலை வாய்ப்புகளை உருவாக்க அனுமதித்தால், இன்னும் பல அகதிகள் மலேசியாவிற்கு வரக்கூடும்” என்று உள்துறை அமைச்சகம் கவலைப்படுகிறது என்றார்.

“எனவே, செயல்படுத்துவது குறித்து நாம் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். இப்போதைக்கு, இன்னும் முடிவை எடுக்கவில்லை,” என்று கோலாலம்பூரில் நேற்றிரவு நடந்த நோன்பு துறப்பு விழா பெர்கேசோ 2022 முடித்த பின்னர் ஒரு ஊடக சந்திப்பில்  அவர் கூறினார்.

நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சுங்கை பக்காப் குடிவரவுத் தடுப்புக் கிடங்கில்( Sungai Bakap Immigration Detention Depot) இருந்து 528 கைதிகள் தப்பிச் சென்றதை பற்றி கருதுரைத்த அவர், “நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, மொத்தம் 351 அகதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் தப்பியோடிய எஞ்சிய கைதிகளை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” என்றார்.

மேலும் பினாங்கின், ஜாவி(Jawi) அருகே தெற்கே செல்லும் வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் (பிளஸ்) கே.எம்.168 இல் சாலையைக் கடக்கும்போது வாகனம் மோதியதில் மேலும் ஆறு பேர் கொல்லப்பட்டனர் என்றார்.