மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் மரணம் – பிள்ளைகளை கவனமாக பேணுங்கள்

பெற்றோர்கள் தங்களின் பதின்ம வயது பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும் என்றும், அவர்களை மோட்டார் சைக்கிள் ஓட்டவோ அல்லது சட்டவிரோத பந்தயங்களில் ஈடுபடவோ அனுமதிக்க வேண்டாம் என்றும் போலீசார் இன்று வலியுறுத்தினர்.

நேற்றிரவு ஜொகூர் பாசிர் குடாங்கில் (Pasir Gudang) மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட மூன்று சிறார்கள்  இறந்ததை அடுத்து இது நினைவுறுத்தப்பட்டது.

தாமன் கோட்டா மசாயில் (Taman Kota Masai ) உள்ள சாலையில் இரவு 10.30 மணியளவில் விபத்து நடந்தபோது, ​​பாதிக்கப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் பந்தயத்தில் ஈடுபட்டதாக (Seri Alam) மாவட்ட போலீசார் நம்புகின்றனர்.

“பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களுடன் ஒருவருக்கொருவர் பந்தயத்தில் மோதியுள்ளதாகவும் அதன் பயனாக அவர்கள் தூக்கி எறியப்பட்டதாகவும்  நம்பப்படுகிறது.”

“விபத்தால் பாதிக்கப்பட்டவர்களில் மூவர் சாலையின் இடதுபுறம் வீசப்பட்டனர், மற்றவர் சாலையின் வலதுபுறம் வீசப்பட்டார்” என்று மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் சுகைமி இஷாக் கூறினார்,

இந்த விபத்தில் 17 வயதுடைய மற்றொரு வாலிபரும் காயமடைந்தார்.

சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் பொறுப்பற்ற அல்லது ஆபத்தான வாகனம் ஓட்டியதால் மரணத்தை ஏற்படுத்தியதற்காக போலீசார் வழக்கை விசாரித்து வருவதாக சுகைமி  கூறினார்.