நேற்று என்னுடைய கருத்துக்குப் பதில் தெரிவிக்கும் வகையில், எங்களின் 22 மாத கால ஆட்சி “குப்பை” என்றும் அவற்றைச் சுத்தம் செய்ய அவரது அமைச்சு முயல்கிறது என்றும் சரவணன் கூறியிருக்கிறார்.
பாரிசானின் 60 ஆண்டுக் கால ஆட்சியில் நடந்த சீர் குலைவை சரவணன் “குப்பை “ என்று சொல்லாமல் சொல்கின்றாரா?
சில உண்மைகளை அவருக்கு நினைவு படுத்த விரும்புகிறன்.
“குப்பை “ என்று அவர் கூறுவது 60 ஆண்டுக் காலம் ஆட்சியில் பாரிசான் சேர்த்து வைத்த சொத்து என்று என்னால் வாதிட இயலாது.
ஆனால். ஷெராட்டன் வழி ஆட்சியை “திருடப்பட்டது” அந்த வகையில் அமைச்சரான சரவணன் மனித வள அமைச்சர் பதவியை வகிப்பது பெருமைக்கிறியது. ஆனால் அந்த மதிப்பை அவர் தற்காத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வகையில் அதைத் தற்காக்கத் தவறினால், அந்த பதவிக்கு அவர் தகுதியற்றவராவார்.
பாரிசானின் 60ஆண்டுக் கால ஆட்சியில் தீர்க்கப்படாத பல குப்பைகள் இருப்பதை அவரும் உணர்வார். அவற்றைச் சுத்தம் செய்ய நம்பிக்கை கூட்டணி எடுத்த முயற்சியும் மக்களுக்குத் தெரியும்.
முதலாளிகள் தான் வேலைகளை உருவாக்குகிறார்கள் என்ற அடிப்படை பொருளாதார தத்துவத்தைச் சரவணன் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் . அதே வேளையில் குறைந்த பட்ச சம்பளத்திற்கான முன்னெடுப்புகளும் ஆக்கப் பூர்வமான முறையில் நடைபெற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை . ஆனால் சரவணன் எடுத்த இந்த முடிவுகளில் சரியான அணுகு முறை இல்லை.
இந்த குறைந்த பட்ச சம்பளம் உயர்வு உத்தரவு நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தால் 10 ஜனவரி 2020ல் அரசிதழில் வெளியிடப்பட்டு அதே வருடம் பிப்ரவரி மாதம் நடைமுறைப்படுத்தப்பட இருந்தது.
அதன் பின் அரசாங்கம் “ கொள்ளை” போன பின்னர் அது குறித்த தொடர் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
தேசிய சம்பள ஆலோசனை மன்ற சட்டம் 2011 (பிரிவு விதி 25 (1) ன் படி இரண்டிற்கு ஒருமுறை இந்த உத்தரவு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். இப்பொழுது ஏப்ரல் 22 ஆகிவிட்டது , இன்னும் இந்த சட்டம் எப்பொழுது அரசு செய்தி இதழில் வருமென்று தெரியவில்லை.
இது சார்பாக அமைச்சர் விளக்கம் தரலாம்.
அடுத்தது, கொத்தடிமை கொடுமைகள் மலேசியாவில் நடைபெற்றால் அது குறித்த தகவல்களை கோலாலம்பூரிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் உலக தொழிலாளர் நிறுவனமும் தமக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். இதை அவரது அமைச்சே நேரடியாக ஈடுபடவேண்டும். மாறாக அவர் மூன்றாம் தரப்பு புகார்களுக்குக் காத்திருப்பது ஒரு பலவீனமான நடைமுறையாகும்.
அடுத்த படியாக மலேசியாவின் சர்வதேச மனித கடத்தல் பட்டியலில் மதிப்பீடு தற்போது தாழ்ந்த நிலைக்குச் சென்றுள்ளது. அமெரிக்காவின் தற்போது மலேசியா மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வெளிநாடுகளுக்கு தங்களின் உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனங்கள் இதனால் பெரிதும் பாதிப்புள்ளகியுள்ளன. இந்த பெரிய குழப்பம் உருவாக காரணமானவர்கள் உணர வேண்டும்.
தேவையான சட்டத் திருத்தங்களை அமலுக்குக் கொண்டுவந்திருந்தால் இந்த மூன்றாம் கட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட அவலத்திலிருந்த நாட்டை காப்பாற்றி இருக்கலாம். தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா 1955, தொழிலாளர் நலன் பாதுகாப்பு மசோதா 1994. தொழிலாளர் குறைந்த பட்ச வீட்டு வசதிகள் மசோதா 1990 இவைகள் அனைத்துமே 2020 க்குள் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்..
நான் மனித வள அமைச்சராக இருந்தபோது, வெளிநாட்டுத் தொழிலாளர்களை நிர்வகிக்க வெளிப்படையான சுயேச்சை குழு ஒன்றை முன்னாள் மேல் முறையீட்டு நீதி மன்ற நீதிபதி டத்தோ ஸ்ரீ ஹிஷாமுடின் யுனுஸ் கீழ் அமைத்தேன். இதனால் தொழிலாளர் மேம்பாட்டிற்காக 40 பரிந்துரைகளைக் கொண்ட ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
ஆனால் இந்த பரிந்துரைகளை நிறைவேற்றப்படவில்லை. முன்னாள் பிரதமர் முஹிடின் இதை வேண்டாமென்று தடை செய்தார்.
மற்றுமொரு விசயத்தில் சரவணன் கவனம் செலுத்த வேண்டும். தேசிய தொழிலாளர் ஆலோசனை மன்ற கூட்டங்கள் அல்லது பங்குதாரர்களைக் கொண்ட கூட்டங்களை அவர் தலைமையேற்று நடத்த வேண்டும். இந்த கூட்டங்கள் கட்டாயமாக நடத்தப்பட வேண்டுமென உலக தொழிலாளர் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் அவரின் இந்த குறைந்த பட்ச சம்பளமான 1500 வெள்ளி எல்லா துறைகளுக்கும் பொருந்தும் என்றும் இப்பொழுது குறிப்பிட்ட சில துறைகளுக்கு விலக்குள்ளது என்று கூறுவது, அதே போல இந்தோனேசியப் பணிப்பெண்களுக்கு இந்த 1500 வெள்ளி கொடுக்கப்பட வேண்டுமென்று சொல்லிவிட்டு இப்பொழுது அதுவும் இல்லை என்று சொல்வது போன்றவை ஒருபுறம் அமைச்சரின் ஆர்வத்தையும் அடுத்த கணம் அரசியல் நிதர்சனத்தையும் பிரதிபலிக்கின்றன என்றுதான் கருத வேண்டும்.
மு.குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஈப்போ பாராட்