பாஸ் கட்சியை பற்றி தவறாகப் பேசி வருவதாகக் கூறப்படும் ‘அதிருப்தி அடைந்த’ இரண்டு கட்சித் தலைவர்களுக்கு எதிராக முழு அளவில் மனோவியல் போரைத் தொடங்குவதற்கு அந்தக் கட்சியின் அனைத்து அமைப்புக்களும் தயாராகி வருகின்றன.
முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி, முன்னாள் துணைத் தலைவர் நஷாருதின் முகமட் ஈசா ஆகிய அந்த இருவருவரும் பாஸ் கட்சிக்குள் பதற்றத்தைத் தோற்றுவித்து வருவதோடு கட்சிக்குப் பாதகமான கருத்துக்களையும் வெளியிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் இருவரும் பல பாஸ் தலைவர்களைச் சந்தித்து “கட்சியின் போராட்டத்தில் இனிமேலும் நம்பிக்கை வைக்க வேண்டாம்” எனக் கேட்டுக் கொண்டு வருவதாக பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி, கட்சி ஏடான ஹாராக்கா வழங்கிய சிறப்புப் பேட்டியில் கூறினார்.
“ஹசான் பல பாஸ் பிரமுகர்களைச் சந்தித்து கட்சியை இனிமேலும் நம்ப முடியாது எனக் கூறிக் கொள்வதில் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு அவர்களை வற்புறுத்துவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.”
“அந்தப் பிரமுகர்கள் யார் என நான் வெளியிடப் போவதில்லை. பாஸ் கட்சியின் எதிரிகளின் கட்டுக்குள் இருந்து கொண்டு ஹசான் அதனைச் செய்து கொண்டிருக்கிறார் என்று மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்.” என முஸ்தாபா அந்தப் பேட்டியில் தெரிவித்தார்.
ஹசானும் நஷாருதினும் நீண்ட காலத்துக்கு கட்சியில் இருக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் விரைவில் வெளியேறுவர் என எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் சொன்னார்.
கடந்த கட்சித் தேர்தலில் தோல்வி கண்ட அவர்கள் இருவரும் ‘விரக்தி அடைந்தவர்கள்’ என அவர் வருணித்தார்.