ஹாடி ஹராப்பானை நிராகரித்தார்: ‘அவர்களின் கூடாரத்தில் எலிகளும் பூனைகளும் உள்ளன’

பாஸ் கட்சியின்  தலைவர் அப்துல் ஹாடி அவாங், அடுத்த  பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு எதிராக நேராகப் போராடும் பக்காத்தான் ஹராப்பானின் ‘பெரிய கூடாரத்தின்’ கீழ் ஒத்துழைக்க முடியாது என்று காட்டமாக கருத்துரைத்தார்.

பாஸ் அந்த ‘பெரிய கூடாரத்தில்’ சேராது, மாறாக முஸ்லிம்களின் மிகப்பெரிய கட்சிகளான பெர்சத்து மற்றும் அம்னோவுடன் இணைந்து “முஸ்லிம் ஒற்றுமை” என்ற அரசியல் திட்டத்தை பாதுகாக்கும் என்றார்.

அதுமட்டுமின்றி, முஸ்லிம் அல்லாத அமைப்புகள் மற்றும் தீவிரத்தன்மை இல்லாத கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்கிறார் இவர்.

“நாங்கள் அந்த கூடாரத்தில் சேர மாட்டோம், ஏனென்றால் அதில் ‘எலிகள்’ உள்ளன, ‘பூனைகள்’ உள்ளன, அனைத்து வகையானவையும் உள்ளன. அவர்கள் அனைவரும் அந்த  கூடாரத்தில் உள்ளனர், ”என்று ஹடி  சொன்னதாக பெர்னாமா தெரிவித்தது.

சில பாஸ் தலைவர்கள் தேசிய ஒருங்கிணப்பில் (Muafakat Nasional) இனைந்து   தங்கள் ஒத்துழைப்பைத் தொடர்வதில் ஆர்வம் காட்டினாலும், தற்போதைய அரசாங்கத்தில் மேலாதிக்கக் கட்சியாகக் கருதப்படும் அம்னோ, பாஸ் உடன் இனைந்து செயல்ப்ட ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை.

அம்னோவுக்கு எதிரான பாஸ் தலைவர்களின் சதித்திட்டத்தை வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் ‘பாஸ் லீக்ஸ்’ ஆவணம் வெளிவந்தவுடன்,  இந்த இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு சமீபத்தில் மோசமடைந்துள்ளது.

“கசிந்த ஆவணம்” என்பது பாஸ் துணைத் தலைவர் அஹ்மத் சம்சூரி மொக்தார்,  பொதுச்செயலாளர் தகியுதீன் ஹாசன் மற்றும் பெர்சத்து, பெஜுவாங் மற்றும் அம்னோவி ஆகிய கட்சிகளின் பிரமுகர்கள் இடையே கடந்த  மார்ச் 24 முதல் ஏப்ரல் 7 வரையில் பேச்சுவார்த்தைகளின்  சுருக்கமாகும்.

அந்த ஆவணத்தின்படி, பெர்சத்து தலைவர் முஹிடின் யாசின் பாஸ் தலைவர்களிடம் “அட்டர்னி ஜெனரலும் தலைமை நீதிபதியும் அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மற்றும் முன்னாள் பிரதம மந்திரி நஜிப் அப்துல் ரசாக் மீதான வழக்கு மற்றும் தண்டனையை விரைவுபடுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்” என்று கூறினார் என்பதும் அடங்கும்.

அந்த கசிந்த ஆவணம் “குப்பை” என்று அஹ்மத் சம்சூரி கூறியிருக்கிறார், ஆனால் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில அம்னோ மற்றும் பெர்சாத்து பிரமுகர்களுடன் தான் கலந்துகொண்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.