மே தின பேரணி தொடர்பாக நான்கு பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர் –  பிஎஸ்எம் கூறுகிறது

கடந்த வாரம் கோலாலம்பூரில் நடந்த மே தின பேரணி தொடர்பாக நான்கு பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளதாக மலேசியா சோசியலிஸ்ட் கட்சியின் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் தெரிவித்தார்.

தன்னைத் தவிர, மற்ற மூவரும் நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த கோகிலா ஞானசேகரன், சுபாங் கிளையின் டி மோகன் எலன் மற்றும் சுவராம் மனித உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வோங் யான் கெ.

“அமைதியாகவும், ஒழுங்காகவும், எந்த அசம்பாவிதமும் இன்றி நடந்த ஒரு நிகழ்வு அது, எனவே நாங்கள் ஏன் அழைக்கப்பட்டோம் என்பது புதிராக உள்ளது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.

அமைதி பேரணி சட்டம் 2012ன் கீழ் இந்த விசாரணை நடத்தப்பட இருப்பதாக நம்பப்படுகிறது என்றும், நால்வரும் மே 7 ஆம் தேதி தங்கள் வாக்குமூலங்களை பதிவு செய்ய ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

மலேசியாகினி உறுதிப்படுத்துவதற்காக டாங் வாங்கி காவல்துறையைத் தொடர்புகொண்டது.

மே தினப் பேரணியில் மக்கள் பங்கேற்ற அது வழக்கமாக மே 1 ஆம் தேதி நடத்தப்படும். வரவிருக்கும் ஹரி ராய ஐடில்பித்ரி விடுமுறையுடன் மோதுவதைத் தவிர்ப்பதற்காக இந்த ஆண்டு ஏப்ரல் 23-இல் நடத்தப்பட்டது.

தொழிலாளர்களுக்கு அதிக சமூகப் பாதுகாப்பிற்கு அழைப்பு விடுக்கும் வகையில், சென்ட்ரல் மார்க்கெட்டில் இருந்து கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி ஹால் வரை நடந்த பேரணியில் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

பேரணியின் பிரகடனத்தில் ரிம 1,500  குறைந்தபட்ச சம்பளமாகவும்,  மற்றும் ஒப்பந்த கூலி வேலமுறையை ஒழித்தல் உள்ளிட்ட 26 கோரிக்கைகளை அரசாங்காத்தின் அமுலாக்கத்திற்காக முன்வைத்தனர்.