ஆன்லைன் சந்திப்பு முறையை (Sistim Temujanji Online(STO) ஒழித்து, மலேசிய கடப்பிதழ் விண்ணப்பம் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான சிக்கல்களைச் சமாளிக்க அலுவலகங்கள் மற்றும் கவுண்டர்களின் இயக்க நேரத்தை நீட்டிக்கிறது குடிவரவுத் துறை.
கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு வெளியே உள்ள அனைத்து பாஸ்போர்ட் வழங்கும் அலுவலகங்களுக்கான STO மே 9 முதல் ரத்து செய்யப்படும் என்றும், கோலாலம்பூர், சிலாங்கூர், ஜொகூர் பாரு, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய இடங்களில் உள்ளவை மே 16 முதல் அகற்றப்படும் என்று குடிவரவு தலைமை இயக்குநர் கைருல் டிசைமி டாட் அறிவித்தார்.
“மே 16 முதல் STO மூலம் சந்திப்பு தேதியைப் பெற்றவர்கள், கொடுக்கப்பட்ட தேதியைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர், சிலாங்கூர், புத்ராஜெயா, ஜோகூர் பாரு, நெகிரி செம்பிலான் மற்றும் மேலாக்கா ஆகிய இடங்களில் உள்ள அனைத்து பாஸ்போர்ட் வழங்கும் அலுவலகங்களும் மே 14 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படும் என்றும் கைருல் அறிவித்தார்.
அதுமட்டுமின்றி, கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் ஜொகூர் பாருவில் உள்ள நகர்ப்புற மாற்ற மையங்களில் கவுண்டர்களின் இயக்க நேரம் மே 16 முதல் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்படும்.
ஏப்ரல் 1 முதல் நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மற்றும் புதுப்பித்தல்களின் அதிகரிப்பு காரணமாக மலேசியர்கள் ஆன்லைன் முறையில் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர் என்று கைருல் கூறினார்.
ஏப்ரல் 1 முதல் 26 வரை நாடு முழுவதும் 151,173 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
சராசரியாக, தினசரி 8,000 பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்பட்டன, இது எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு ஒப்பிடும்போது சுமார் 40% அதிகரித்துள்ளது.
புதிய விண்ணப்பதாரர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், குழந்தைகள் மற்றும் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் விண்ணப்பதாரர்கள் உடனடியாக புத்ராஜெயாவில் உள்ள கவுண்டருக்குச் செல்லலாம் என்று கைருல் கூறினார்.
“இருப்பினும், புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு, புத்ராஜெயா பாஸ்போர்ட் அலுவலகம் ஆன்லைனில் செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் மின்னஞ்சல் மூலம் அறிவிப்பைப் பெற்றவர்களையும் மட்டுமே செயல்படுத்தும்,” என்று அவர் கூறினார்.