அடிமை தொழிலாளர், இளைஞர்களை குறிவைக்கும் இணையவழி வேலை நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் வேண்டும்

அடிமை தொழிலாளர் மற்றும் வேலை தேடும் இளைஞர்களை குறிவைக்கும் மோசடியான இணையவழி விளம்பரங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று டிஏபி பொதுச் செயலாளர் லோக் சியூ ஃபூக் கூறுகிறார்.

மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷன் (MCMC), போலிஸ் மற்றும் சட்ட அமுலாக்க பிரிவு கூகுள் மற்றும் சமூக ஊடக நிறுவனமான முகநூல் போன்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.

“இந்தக் குற்றவாளிகளைத் தடுத்து, அயல் நாட்டில் சிக்கிய மலேசியத் தொழிலாளர்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு வருவதற்கு நமது அண்டை நாடுகளில் உள்ள அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுங்கள்” என்று தொழிலாளர் தினத்துடன் இணைந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மார்ச் மாத இறுதியில், கம்போடியாவில் 50 க்கும் மேற்பட்ட மலேசிய இளைஞர்கள் தங்கள் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டு, அவர்களை கொண்டு  மக்களை ஏமாற்றும் வேலைகளை செய்யத்  தள்ளப்பட்டதாக வெளியான செய்திகளால் நாடு அதிர்ச்சியடைந்தது. “லாபகரமான வகையில் சம்பாதிக்கும் வேலைகள்” என்ற வகையில்  அவர்கள் அங்கு ஈர்க்கப்படுகின்றனர்.

ஏப்ரல் தொடக்கத்தில், ஏப்ரல் 5 ஆம் தேதி 16 மலேசியர்கள் கம்போடிய காவல் அதிகாரிகளால் மீட்கப்பட்டு தங்கள் வீடுகளுக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் சிறைபிடிக்கப்பட்டவர்களால் சட்ட விரோத செயல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் மற்றும் வாக்குறுதியளிக்கப்பட்ட ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

அண்டை நாடுகளில் மீட்கப்படுவதற்காக 45 மலேசியர்கள் இன்னும் காத்திருப்பதாக 35 புகார்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அதோடு, மலேசியத் தொழிலாளர்களுக்கு அதிக சமூகப் பாதுகாப்பை வழங்குவதில் அரசாங்கத்தை ஆதரிக்க DAP தயாராக இருப்பதாக லோக் கூறினார்.

தற்போது 6% மட்டுமே தொழிற்சங்கம் அமைக்கப்பட்டுள்ள  நிலையில், தொழிலாளர்களிடையே குறைந்த அளவிலான தொழிற்சங்கமயமாக்கல் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

உறுப்பினர்களை ஈர்ப்பதற்கும் வருங்கால இளவயது தொழிலாளர்களைச் சென்றடைவதற்கும் தொழிற்சங்கங்கள் மிகவும் நெகிழ்வானதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.