சின் தோங் – ஜொகூரில் சம்பளம் குறைந்தபட்சம் சிங்கப்பூரில் 2/3 ஆக இருக்க வேண்டும்

சிங்கப்பூரில் கிடைக்கும் சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கு என்ற அளவில் சம்பளம் கிடைத்தால், ஜோகூர் மக்கள் தங்கள் மாநிலத்திலேயே வேலை செய்ய விரும்புவார்கள் என்கிறார் ஜொகூர் மாநில சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் லியு சின் தோங்.

பெர்லிங் சட்ட மன்ற உறுப்பினரான இவர், சிங்கப்பூரில் கிடைக்கும் சம்பளம், நாணய பரிமாற்றம் வழி, ரிங்கிட்டுக்கு மாற்றும் போது, அந்த அளவிற்கான சம்பளம் மலேசியாவில் கிடைப்பதில்லை என்றார்.

“மாநில அரசு அதன் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளுக்கும் மத்தியில் ஒரு கெளரவமான ஊதியத்துடன் கூடிய வேலைகளை வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.”

“.ஜொகூரில், கெளரவமான சம்பளத்துடன் கூடிய ஒரு நல்ல வேலை என்பது சிங்கப்பூரின் சம்பளத்தில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கை வழங்குவதாகும்”, என்றார்..

எடுத்துக்காட்டாக, ஒரு திறமையான மலேசியத் தொழிலாளிக்கு மாதம் ஒன்றுக்கு SG $2,000 ஊதியம் வழங்கப்பட்டால், ஒரு RM3,000 முதல் RM4,000 வரை சம்பளத்துடன் கூடிய வேலை, அவர்களை  மலேசியாவில் வேலை செய்ய தூண்டும். அவர்களும் திரும்புவதில் மகிழ்ச்சியடைவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

உள்ளூர் மக்களுக்கு சிறந்த ஊதியத்துடன் தரமான வேலைகளை உருவாக்க அடிப்படையில் மாநிலத்தில் உள்ள அனைத்து முதலீடுகளையும் மதிப்பீடு செய்வது  குறித்த ஆலோசனைகளையும் லியு வழங்கினார்.

ஜொகூரில் உயர்தர முதலீடுகள் தேவைப்படுவதாகவும், இந்த வேலை வாய்ப்புகள் இளம் மலேசியர்களின் தகுதிகளுடன் பொருந்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், புதிய ஜொகூர் அரசாங்கம் கெளரவமான சம்பளத்துடன் நல்ல வேலைகளை உருவாக்க ஐந்து ஆண்டு கால திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் லியு வலியுறுத்தினார்.

மாநிலத்தில் உள்ள கொள்கைகள் தொழில்நுட்ப மேம்பாடு, ஆட்டோமேஷன் மற்றும் தொழிற்புரட்சி 4.0 ஆகியவற்றை நோக்கியும் இருக்க வேண்டும், இது உடலுழைப்பை குறிப்பாக திறமையற்ற வெளிநாட்டு தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் என்றும் லீவ் கூறினார்.

இது இறுதியில், இது ஒவ்வொரு தொழிலாளிக்கும் சிறந்த ஊதியம் வழங்க வழி வகுக்கும், என்றார்.

“ஜொகூர் மற்றும் மலேசியப் பொருளாதாரம் முழுவதும் இவ்வளவு பெரிய ஊதியக் கட்டமைப்பு மாற்றம் மற்றும் மேம்பாடு ஒரே இரவில் நடக்காது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இந்தத் திட்டம் நிறைவேற 5 முதல் 10 ஆண்டுகள் ஆகலாம்”.

“ஆனால் ஆயிரம் மைல்களின் பயணம் இப்போதிருந்து எங்காவது ஒரு இடத்தில் தொடங்க வேண்டும்.” என்கிறார் இந்த முற்போக்கு அரசியல்வாதி.