கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட்-19 தொற்றுநோயின் சவால்களை எதிர்கொள்வதில் மலேசியர்கள் தங்கள் வலிமையை நிரூபித்துள்ளனர், இப்போது ரமடான் மற்றும் நோன்பு பெருநாள் மகிழ்ச்சியை மீண்டும் அனுபவிக்க முடியும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று தெரிவித்தார்.
சவால்களை எதிர்கொள்வதில் மக்களின் ஒற்றுமையே அரசாங்கத்தின் மீட்பு முயற்சிகளின் அடிப்படையாகும், இதனால் மக்கள் மீண்டும் சுகமாக வாழ முடியும் என்று பிரதமர் கூறினார்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல்களுக்கு மத்தியில் மலேசியா அமைதி மற்றும் நிலைத்தன்மையுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்று நேற்றிரவு தனது நோன்பு பெருநாள் செய்தியில் இஸ்மாயில் கூறினார்.
மலேசியர்கள் நோன்பு பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் போது, ”பாலஸ்தீனம், சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா போன்ற பிரச்சனையுள்ள நாடுகளில் உள்ள நமது சகோதர சகோதரிகள் கண்ணீருடன் இந்நாளை அனுசரிகின்றார்கள்,” என்று அவர் தனது நோன்பு பெருநாள் செய்தியில் கூறினார்.
இனம், கலாசாரம், மதம் போன்ற வேறுபாடின்றி ஒருவரையொருவர் மதித்து குடும்பமாக வாழ்வதன் மூலமே அமைதியை அடைய முடியும் என்று பிரதமர் இஸ்மாயில் கூறினார்.
பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், நோன்பு நாளை கொண்டாடும் போது, பொதுமக்கள் தங்கள் சொந்த பாதுகாப்புக்காகவும், தங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காகவும் சுய ஒழுக்கத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் நினைவூட்டினார்.