தாயிப்புக்கும் தியோவுக்கும் உள்ள வேறுபாடு

“தியோ பெங் ஹாக் சாதாரண 2,500 ரிங்கிட்டுக்காக உயிரை இழந்தார். பல பில்லியன் ரிங்கிட் பெறும் ஊழல் விவகாரத்தில் எத்தனை பேர் சாக வேண்டும்?”

எம்ஏசிசி தாயிப் ஊழல் வழக்கு மீது மௌனம் சாதிக்கிறது

மிலோசெவிக்: அப்துல் தாயிப் மாஹ்முட் என்ற அந்த மனிதருடன் விளையாட வேண்டாம். “போமோக்கள் அரசியல்வாதிகளுக்கு உதவ முடியாது” என டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார்.

என்றாலும் தலை சிறந்த போமோ, மாயாஜாலங்களை செய்ய முடியும் என்பதைக் குறிப்பிட மகாதீர் மறந்து விட்டார். காடுகளை மரப் பலகைகளாக மாற்றக் கூடிய மலேசியாவின் ஸ்டீவ் ஜாப்ஸ்-ஆன சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்-டுக்கு அவர் தமது ஆசிகளை வழங்கியுள்ளார்.

திறமையற்றவர்களைக் கூட டாக்டர் மகாதீரின் மாயாஜாலம் கோடீஸ்வரர்களாக்கியுள்ளது (முன்னாள் மலேசிய விமான நிறுவன தலைமை நிர்வாஅக அதிகாரி தாஜுடின் ராம்லியை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்) அத்தகைய மனிதர்களுக்கு வங்கிப் பணம் எப்படியோ போய்ச் சேர்ந்து விடுகிறது. அவர்கள் ஒரே நாளில் புகழ் பெற்ற மனிதர்களாகி விடுகின்றனர்.

அடுத்து அவர்கள் மீண்டும் மாயாஜாலத்தில் நிகழ்வது போல எல்லாவற்றையும் இழந்து விடுகின்றனர். காரணம் அவர்கள் வழி தவறி தவறான போமோவிடம் சென்றதாகும். அவருடைய புதல்வர்களுக்கும் தந்தையின் மாயாஜாலச் சலுகைகள் கிடைத்துள்ளன. அவற்றை அவர்கள் இழக்கவில்லை. அவர்கள் அதிசயத்தக்க வகையில் ஒன்றும் இல்லாத நிலையிலிருந்து எல்லாவற்றையும் அடைந்துள்ளனர்.

எம்ஏசிசி (மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்) தாயிப்-பை விசாரிக்கும் போது மிக மிக வலிமையான போமோவைக் கொண்டு செல்வது நல்லது.

சரவாக் டயாக்: ஆகவே இது தெளிவாகத் தெரிந்த விஷயமே. பிஎன் தனது அரசியல் எதிரிகளைக் கொல்வதற்கு வைத்திருக்கும் கருவியே எம்ஏசிசி ஆகும்.

எடுத்துக்காட்டுக்கு தியோ பெங் ஹாக் விஷயத்தில் மிகச் சிறிய தொகையே சம்பந்தப்பட்டிருந்தது. எம்ஏசிசி,  சாகும் வரை அவரை விசாரணை செய்தது.

இருந்தும் தாயிப்புக்கும் அவரது குடும்பத்துக்கும் மலேசியாவிலும் வெளிநாடுகளிலும் பில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களும் பணமும் உள்ளன. ஆனால் தாயிப்-பையோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களையோ எம்ஏசிசி இதுவரை பேட்டி கண்டது கூட இல்லை.

எம்ஏசிசி முதலில் இயற்கை வள நிர்வாகம் திட்ட அமைச்சு, நில, அளவாய்வுத் துறை, காட்டுவளத் துறை ஆகிவற்றிலுள்ள கோப்புக்கள் கைப்பற்ற வேண்டும். அவசியமானால் அந்த அமைப்புக்களின் முன்னாள் இயக்குநர்களையும் வெட்டுமர அனுமதிகளை வைத்திருக்கின்றவர்களையும் அது விசாரிக்க வேண்டும்.

அவ்வாறு செய்வதற்கு எம்ஏசிசி-க்கு ஆற்றல் இல்லை என்றால் அது, தாயிப்பும் அவரது குடும்பமும் சொத்துக்களையும் பணத்தையும் வைத்திருப்பதாகக் கூறப்படும் கனடா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இயங்கும் ஊழல் தடுப்பு நிறுவனங்களுடன் இணைந்து புலனாய்வுப் பணிகளை மேற்கொள்ளலாம்.

ஜேம்ஸ் டீன்: “தியோ பெங் ஹாக் சாதாரண 2,500 ரிங்கிட் பிச்சைக் காசுக்காக உயிரை இழந்தார். பல பில்லியன் ரிங்கிட் பெறும் ஊழல் விவகாரத்தில் எத்தனை பேர் சாக வேண்டும்?”

அலன் கோ: எம்ஏசிசி விசாரணைப் பிரிவு துணை ஆணையர் அஸ்மி முகமட் அவர்களே, உங்களிடம் கேள்வி எழுப்பப்படும் போது அதற்குப் பதில் அளிக்க நான் சரியான நபர் அல்ல எனச் சொன்னால் நீங்கள் ஏன் எம்ஏசிசி-யை பிரதிநிதிக்கின்றீர்கள்?

தயவு செய்து உங்கள் எஜமானர் அபு காசிம் முகமட்டை அல்லது கருத்தரங்கில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கக் கூடியவர்களை அனுப்புங்கள்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கும் அந்த சரவாக் “ஜமீன்தார்” மீது ஏன் இன்னும் குற்றம் சாட்டப்படவில்லை என்பதை அறிய பொது மக்கள் விரும்புகின்றனர்.

அர்மகெடோன்: சரவாக் முதலமைச்சருக்கு எதிராம ஊழல் குற்றச்சாட்டுக்களை குறிப்பாக வெட்டுமர அனுமதிகள் தொடர்பாக எம்ஏசிசி விசாரிப்பதை அதன் தலைமை ஆணையர் அபு காசிம் முகமட் கடந்த ஜுன் மாதம் உறுதிப்படுத்தினார்.

ஆனால் அது அதனை விசாரிப்பதாகத் தெரியவில்லை. மாறாக அதனை குழி தோண்டி புதைக்க முயலுவதாகத் தோன்றுகிறது.

TAGS: