பகிர்வதற்கு முன், காணாமல் போன குழந்தைகளைப் பற்றி புகாரளிக்கவும் – காவல்துறை

சமூக ஊடகங்களில் காணாமல் போன குழந்தைகளின் அறிவிப்புகளை வெளியிடும்போது, குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் பாதுகாப்பை கவனித்தில் கொண்டு செயல்படுமாறு  காவல்துறையினர் எச்சரித்தனர்.

முகநூல் மற்றும் புலனம் போன்ற தளங்களில் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட விரும்புபவர்கள் சரியான வழியில் செல்ல வேண்டும் என்று புக்கிட் அமன் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் அப்த் ஜலீல் ஹசன் (Abd Jalil Hassan) கூறினார்.

பெற்றோர்கள் முதலில் காவல்துறையில் காணாமல் போனவர் சார்பான  அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும், அதன் பிறகு எங்களின்  நிலையான இயக்க நடைமுறைகளைக் கொண்ட வழிமுறை  மூலம் காவல்துறை ஒரு அறிவிப்பை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் விளக்கினார். இப்படி செய்வதன் மூலம்  தகவல் பரவலாகப் பரப்பப்படுவதை உறுதி செய்ய இயலும்.

“அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய பணயக்கைதிகளின் கூறுகள் எதுவும் இல்லை என்று விசாரணையில் கண்டறியப்பட்ட பிறகு பெற்றோர்களின் எழுத்துப்பூர்வ அனுமதியுடன் மட்டுமே அறிவிப்புகள் வெளியிடப்படும்,” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார் .

காணாமல் போன குழந்தையின் புகைப்படம், பெயர், அறிக்கை எண், விசாரணை அதிகாரியின் தொலைபேசி எண் போன்ற தகவல்கள் மட்டுமே அறிவிப்புகளில் இருக்க வேண்டும் என்று அப்துல் ஜலீல் கூறினார்.

காணாமல் போகும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக ஒரு அவசர தேசிய செயலாக்க அமைப்பு (National Urgent Response) ஒன்றை காவல்துறையும், பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து உருவாக்கியுள்ளன.

“NUR  அறிவிப்புகள் முகநூல், வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போன்ற காவல்துறையால் அங்கீகரிக்கப்பட்டவைகளில் மட்டுமே வெளியிடப்படும்,” என்று அவர் கூறினார்.

NUR Alert –  இல்  இதுவரை பல்வேறு நிறுவனங்களை சார்ந்த 41 உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், குற்றவியல் ஆய்வாளர் அக்பர் சதார் கூறுகையில், குழந்தைகள் காணாமல் போன வழக்குகளை சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்துவது, தேடல் நடவடிக்கைகளை எளிதாக்கும், தகவல்களைப் பரப்புவதற்கான விரைவான மற்றும் திறமையான வழியாகும்.“ஆனால், காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் உடனடியாக காவல்துறையிடம் புகாரை பதிவு செய்வது நல்லது”.என்றார்.