போலி ரத்தப் பரிசோதனைகளும் – ‘ஆரோக்கிய உணவும்’- குழுவின் மீது விசாரணை மேற்கொள்ளப்படும்

மூத்த குடிமக்களை சுகாதாரப் பொருட்களை வாங்கும்படி ஏமாற்றும் போலியான ரத்தப் பரிசோதனை பிரச்சாரத்தை ஒரு குழு மேற்கொண்டு வருவதாகவும் , விரைவில் அவர்களை விசாரணை செய்வோம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு அமைச்சகம் ஒத்துழைக்கும் என்று அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

“அத்தகைய குழுக்கள் இருந்தால் உடனடியாக விசாரணை செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட நடவடிக்கை காவல்துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு இருக்கும் என்று அவர் கூறினார்.

“மக்கள், குறிப்பாக முதியவர்கள், இதுபோன்ற பிரச்சாரங்களால் பாதிக்கப்படுவதையும், ஏமாற்றப்படுவதையும் நாங்கள் விரும்பவில்லை” என்று அவர் நேற்று செரி பெர்டானாவில் உள்ள பிரதமரின் இல்லத்தில் ஐடில்பித்ரி விழாவில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

கிள்ளாங் பள்ளத்தாக்கில் முதியவர்களை ஏமாற்றி,இரத்த பரிசோதனை பிரச்சாரங்களை ஏற்பாடு செய்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து ஆரோக்கியமான உணவுப் பொருட்களை வாங்க வைக்கும் நேரடி விற்பனை முகவர்களின் செயல்பாடுகள் குறித்து உள்ளூர் செய்தித்தாளின் ஒரு சிறப்பு அறிக்கையில் கருத்து தெரிவித்துள்ளார் கைரி.