தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் கூட்டமைப்பு(SEAGF) மூலம் 2027 இல் 34வது தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளை நடத்த மலேசியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் கூட்டமைப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டதாக மலேசிய ஒலிம்பிக் கவுன்சில் OCM தலைவர் நோர்சா ஜகாரியா தெரிவித்தார்.
“தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளை நடத்துவதற்கு மலேசிய ஒலிம்பிக் கவுன்சில் மீதான உறுதி மற்றும் நம்பிக்கைக்கு SEAGF கவுன்சிலுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என்று மலேசிய ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
மலேசியா திரும்பியதும், பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் பைசல் அசுமு ஆகியோருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு மலேசிய ஒலிம்பிக் கவுன்சில் ஒரு சந்திப்பை மேற்கொள்ளும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கு முன்பு 1965, 1971, 1977, 1989, 2001 மற்றும் 2017 ஆண்டுகளிலும், இந்த இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளை நடத்திய மலேசியா, ஏழாவது முறையாக மீண்டும் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளை நடத்துகிறது.
புருணை வெளியேறியதைத் தொடர்ந்து 2027 விளையாட்டுப் போட்டிகளை நடத்த மலேசிய ஒலிம்பிக் கவுன்சில் கடந்த ஆண்டு விருப்பம் தெரிவித்திருந்தது.
கோவிட்-19 தொற்றுநோயால் தாமதமான 31வது தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் தற்போது வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு தொடக்க விழா மற்றும் மே 25 அன்று விளையாட்டுகள் முடிவடைகின்றன.
கம்போடியா அடுத்த ஆண்டு மே 5-16 வரை முதல் முறையாக விளையாட்டுகளை நடத்த உள்ளது, அதே நேரத்தில் தாய்லாந்து 2025 இல் விளையாட்டுகளை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.