இஸ்மாயில் சப்ரி: 15-வது தேர்தல் அமைச்சரவையால் முடிவு செய்யப்படும்

நாடாளுமன்றத்தைக் கலைத்து 15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழி வகுக்கும் நடைமுறையின் அடிப்படையில், இது அமைச்சரவையில்தான்  முடிவெடுக்கப்படும் என பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டா? அல்லது அதற்கு அடுத்த ஆண்டா?  பொதுத் தேர்தல் எப்பொழுது என்று கூற  அவர் மறுத்துவிட்டார், மக்கள் காத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.

“கட்சி அரசாங்கத்திலிருந்து வேறுபட்டது, ஏனென்றால் முன்மொழிவு இருந்தால், அது முதலில் அமைச்சரவைக்கு கொண்டு வரப்பட்டு அங்கீகரிக்கப்படும் என்பதை கட்சி அறிந்திருக்கிறது”.

“அமைச்சரவை ஒரு தேதியை முடிவு செய்தால், யாங் டி-பெர்துவான் அகோங்குடன் விவாதிக்க அமைச்சரவை எனக்கு ஆணையை வழங்கும். அடிப்படையில் அதுதான் நடைமுறை.”

“எனவே பொதுத் தேர்தல் இந்த ஆண்டு வருமா இல்லையா, நாம் காத்திருக்க வேண்டும்,” என்று இஸ்மாயில் இன்று கோலாலம்பூரில் உள்ள புத்ரா உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற அம்னோவின் சிறப்பு பொதுக் கூட்டத்திற்கு (EGM) பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இஸ்மாயில் சப்ரிக்கு, அம்னோ அழுத்தம் கொடுத்து முன்கூட்டியே பொது தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

நேற்று அம்னோவின் EGM இல், கட்சியின் பிரதிநிதிகள், பொதுத் தேர்தலுக்குப் பிறகு கட்சித் தேர்தலை ஆறு மாதங்கள் வரை தாமதப்படுத்த அனுமதிக்கும் வகையில் அதன் அரசியலமைப்பைத் திருத்துவதற்கு ஆதரவாக ஒருமனதாக வாக்களித்தனர் .

கட்சியின் அரசியலமைப்பு

இஸ்மாயில் சப்ரி கூறுகையில், அம்னோ இன்று தனது கட்சி அரசியலமைப்பை திருத்தும் முடிவு கட்சி தேர்தலை மட்டுமே பற்றியது.

“இன்று நடந்தது கட்சிக்குள் தேர்தல் பற்றியது,” என்று அவர் மேலும் கூறினார்.

முன்பு அம்னோ தனது தேர்தலை 18 மாதங்கள் வரை மட்டுமே ஒத்திவைக்க முடியும்.

இந்தத் திருத்தத்தின் மூலம், அதன் தலைமையின் பதவிக்காலம் முடிவடைந்து 18 மாதங்கள் வரை அல்லது பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஆறு மாதங்கள் வரை, எந்தத் தேதி பின்னர் வந்தாலும் அந்த தேதிக்கு ஒத்திவைக்கலாம்.

அம்னோ தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருந்தது, ஆனால் இந்த ஆண்டு இறுதி வரை 18 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, இந்தத் திருத்தம் தனது பதவியைக் காப்பாற்றுவதற்காக அல்ல என்றும் , வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்குச் செல்லும் கட்சிக்கு நிலைத்தன்மையை அளிப்பதற்காகத் தான் இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது என்று கூறுற்கிறார்.