குனோங் சுகு மலையேறிய 2 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்

புக்கிட் கிந்தா வனப் பகுதிக்கு அருகில் உள்ள குனோங் சுகு என்ற இடத்தில் நேற்று முன் தினம் இரண்டு பெண்கள் மலையேறும் பொழுது  அடித்துச் செல்லப்பட்டதையடுத்து பேராக் வனத்துறை அனைத்து மலையேறும் நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்துள்ளது.

கனமழையால் அப்பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தற்போது நிலைமை ஆபத்தானதாக இருப்பதாக மாநில வனத்துறை இயக்குனர் ஜின் யூசோப் தெரிவித்தார்.

15.5.2022 -இல், சீ சு யென், 32, மற்றும் ங் யீ செவ், 46 ஆகிய இரு பெண்கள், அதிகாலை 5 மணியளவில் பயணம் மேற்கொண்டிருந்தபோது, ​​நீர் பெருக்கினால் அடித்துச் செல்லப்பட்டனர்.

29 பேர் கொண்ட மலையேறுபவர்களின் குழுவில் இருந்த அவர்கள்   மலையில் நிலச்சரிவு மற்றும் நீர் எழுச்சி போன்ற சத்தங்களைக் கேட்ட பின்பு திரும்பிச் செல்ல முடிவு செய்தனர்.

திரும்பி வரும் வழியில் அந்த குழுவினரை  நீர் ஏற்றம் தாக்கியதில் இந்த  இரு பெண்களும் வேகமான நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

அந்த 29 மலையேறுபவர்களும் வனப் பகுதிக்குள் நுழைவதற்கான அனுமதி பெற்றிருப்பதாக ஜின் கூறினார்.

இன்று காலை 10.20 மணியளவில் சில இடிபாடுகளுக்கு அடியில் பலியான இருவரில் ஒருவரின் உடல் பாகம் கிடத்ததாக  தேடுதல் மற்றும் மீட்புக் குழு கண்டறிந்தது என்று பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்க இயக்குநர் ஷாஹ்ரிசல் அரிஸ் தெரிவித்தார்.

ஒருவரின் கால் பகுதி மட்டும் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து வேறு இடத்தில் மீதமுள்ள உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக ஷாஹ்ரிசல் கூறினார்.

-freemalasiatoday