15வது தேர்தலை விரைவில் நடத்துவது ஏற்புடையதல்ல – மகாதீர்

அடுத்த பொதுத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நாங்கள் ஆதரவாக இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

லாங்காவியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் பிரச்சாரத்தின் காரணமாக கோவிட் -19 அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தான் உட்பட பல வாக்காளர்கள் இன்னும் கவலைப்படுவதாகக் கூறினார்.

“பொதுத் தேர்தலுக்கு இது இன்னும் பொருத்தமானதல்ல என்று நான் நினைக்கிறேன். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சபாவில் (செப்டம்பர் 2020 இல்) என்ன நடந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்”.

“அந்த நேரத்தில், கோவிட் -19 நேர்வுகள் குறைவாக இருந்தன, ஆனால் தேர்தலுக்குப் பிறகு, அது மோசமாகிவிட்டது” என்று அவர் ஆஸ்ட்ரோ அவானியிடம் கூறினார்.

அந்த செப்டம்பர் 2020  கால கட்டத்தில், கோவிட் -19 தடுப்பூசிகள் கிடைக்கவில்லை.

GE15க்கு அழுத்தம்

தற்போதைய நாடாளுமன்றம் ஜூலை 16, 2023 அன்று காலாவதியாகிறது.

அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியுடன் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்

இருப்பினும், சில அம்னோ தலைவர்கள் இந்த ஆண்டு ஜூலை 31 க்குப் பிறகு 15 வது பொதுத் தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள், சமீபத்திய மலாக்கா மற்றும் ஜொகூர் தேர்தல்களின் போது அடைந்த வேகத்தில் சவாரி செய்கிறார்கள்.

அம்னோவின் அரசியலமைப்புச் சட்டத்தில் நேற்று திருத்தம் செய்யப்பட்ட பின்னர் , அதன்  தலைமைத் கட்சித்தேர்தலை ஒத்திவைத்த பிறகு, அம்னோ துணைத் தலைவராக இருக்கும் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீதான அழுத்தம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சட்ட திருத்தத்திற்கு முன், அம்னோ அதன் தேர்தலை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கும்.

இஸ்மாயில் சப்ரி தனது முதல் ஆண்டு விழாவை ஆகஸ்ட் 21 அன்று மட்டுமே கொண்டாடுகிறார்.

வரலாற்றில் மிகக் குறுகிய கால பிரதமர் என்ற பெயரை பெறாமல்  இருக்க, அவர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 5 வரை பதவியில் இருக்க வேண்டும்.