`மே 18` இனப்படுகொலை நாளை உலகத் தமிழர்கள் ஒரே நீரோட்டத்தில் நினைவு கூறவேண்டும் – உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம்

மே 18 இனவழிப்பு நாளை, உலகத் தமிழர்கள் அனைவரும் ஒரே மாதிரியான நீரோட்டத்தில், அதாவது குறைந்தபட்சம் தத்தம் இல்ல முற்றத்தில் (வீட்டிற்கு முன்) அகல் விளக்கு சுடர் ஏற்றி, அதைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து, இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளுக்கு நீதி கோறும் வகையில் நினைவேந்தல் செய்ய வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி வேண்டுகோள் விடுத்தார்.

‘மே 18 தமிழர் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவு நாள்’ என்பது ஈழப்போரின் இறுதிகட்டத்தில் இறந்த, நமது தொப்புள்கொடி உறவுகளை நினைவு கூரும் நாளாகும்.

இது இலங்கை தமிழர் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவராலும் ஆண்டு தோறும் நினைவு கூறப்படுகிறது.

2009-ஆம் ஆண்டில், இந்நாளிலேயே இலங்கை வடக் கிழக்குக் கரையில் அமைந்துள்ள முள்ளிவாய்கால் எனும் கிராமத்தில் ஈழப்போர் முடிவுற்றது.

இலங்கை சிங்கள இனவெறி பவுத்த அரசால், கடந்த 2009-ஆம் ஆண்டு மே மாதம் 16,17,18-ஆம் நாள்களில், பல்லாயிரம் அப்பாவி தமிழர்கள் தமிழீழத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள்.

21-ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய இனப்படுகொலையாக இது கருதப்படுகிறது என்பதை மறுக்க முடியுமா?

இந்த இனப் படுகொலையில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் எனத் தமிழீழ மக்கள் ஈவிரக்கமின்றி அழித்தொழிக்கப்பட்டார்கள்.

அந்த நாளில் தாயகத்தில் எம் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டு இருக்கையில், எம் மக்களைக் காக்க உலக அரங்கெங்கும் வீதி வீதியாக தமிழர்கள் உலகத் தேசங்களிடம் தலையிடக் கோரி மன்றாடி பல போராட்டங்களைச் செய்தார்கள் என பாலமுருகன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

எப்படியாவது தமது தொப்புள் கொடி உறவுகளைக் காக்க யாரேனும் உதவ மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில் அன்று மலேசிய மண்ணிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

கேட்பார் யாரும் இன்றி ஈழத் தமிழர்களைக் கொடுங்கோல் அதிகாரத்தோடு இலங்கை அரசு கொன்றொழித்தது பேரவலமானது.

உலகத் தமிழினத்தால் என்றுமே மறக்க முடியாத ஆறாத வடு அது என்றார் அவர்.

காலம் காலமாக தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்ட சிங்களப் பேரினவாத அரசுகளின் இன அழிப்பு வரலாற்றின் உச்சக்கட்டமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் சுமார் 70 ஆயிரம் முதல் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஈழத்தில் கொன்றொழிக்கப்பட்டார்கள்.

ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் காணாமல் போனார்கள். இலட்சக்கணக்கான மக்கள் படுகாயமுற்றார்கள்.

கொத்துக் குண்டு, இரசாயனக் குண்டு மற்றும் பல்குழல் பீரங்கி என உலகில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்து ஈழத்தமிழினத்தை முற்றாக வேரறுக்கும் வெறியோடு, இந்திய வல்லாதிக்க துணையுடன் இலங்கை இனவெறி அரசு நடாத்திய தமிழினப் படுகொலையின் வலி சுமந்த நினைவுகளை உலகத் தமிழினம் இன்றும் நெஞ்சினில் சுமந்து வருகின்றது.

கொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் மட்டுமல்ல. ஆண்கள், பெண்கள், முதியவர்கள், இளையவர்கள், குழந்தைகள், நோயுற்றவர்கள், நோயற்றவர்கள் என்ற எந்த வேறுபாடுமின்றி வகைதொகை இல்லாமல் சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்டார்கள்.

சாவின் திசையில் முள்ளிவாய்க்காலை நோக்கி இடம் பெயர்ந்த நாட்களின் நினைவுகளையும் துப்பாக்கிகள் ஏந்திய சிங்கள இனவெறி இராணுவத்திடம் தாயும் நிர்வாணமாக தாயின் முன் மகனும் நிர்வாணமாக, தந்தையும் நிர்வாணமாக தந்தைக்கு முன் மகளும் நிர்வாணமாக, பாட்டனும் நிர்வாணமாக பாட்டன் முன்பு பேரன், பேத்தியும் நிர்வாணமாக சாரை சாரையாக சரணடைந்து முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட நினைவுகளையும் சுமந்தபடி ஈழத் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

ஒட்டுமொத்த மனித குலத்தின் மாண்புகளையும், நாகரிகத்தையும் மனிதநேயத்தையும் கேள்வி கேட்டப்படி அவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இன்றுவரை இதற்கான நியாயம் கிடைக்காமல் அத்தனையும் இழந்த இனமாக தமிழினம் இலங்கை அரசிடம் சிறைப்பட்டு இருக்கிறது என்பதே உண்மை.

மறுக்கப்பட்ட எம் மக்களின் நீதிக்காக இன்றும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் சர்வதேச அரசியல் நகர்வுகளூடாக போராடி வருகின்றார்கள்.

சர்வதேசமயப் படுத்தபட்ட தமிழீழ விடுதலை போராட்டத்தின் இலட்சிய கனவை அடைய, ஒன்றுபட்ட தமிழினமாக தொடர்ந்து பயணிப்போம் என இந்த நாளில் விளக்கேற்றி, மலர் தூவி, அகவணக்கம் வீரவணக்கம் செலுத்தி, உறுதிமொழி எடுத்துக் கொள்வோம் என்றார் பாலமுருகன்.

இந்த மே 18 இனப்படுகொலை நாளை நினைவு கூர்ந்து, அந்த அனையா நெருப்பை நெஞ்சில் சுமந்து, கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு நீதி வேண்டி, அதற்கான முன்னெடுப்புகளை சர்வதேச தமிழர்கள் நாம் களம் காண வேண்டும். இனத்தின் முழு விடுதலையை வென்றெடுக்க வேண்டும்.

உலகத் தமிழர்களுக்கென தனி தமிழ் ஈழத்தை உருவாக்க உயிர் தீர்த்த, நமது மான மறவர்களின் மகத்தான இலட்சிய இலக்கு போராட்டத்தை வருங்கால இளைய தமிழர் தலைமுறை பிள்ளைகளுக்கு பயிற்றுவித்து அரசியல் அறிவாயுத போராட்டமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி கேட்டுக்கொண்டார்.