இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள். 2009, மே 18-ல், இலங்கை, முள்ளிவாய்க்கால் பகுதியில், சிங்கள இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கிடையே நடந்த இறுதிகட்டப் போரில், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டுமென மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலின் முத்து என்று அழைக்கப்படும் அந்த அழகிய தீவில், உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது வரலாறு காணா பொருளாதார நெருக்கடியில் அந்த நாடு சிக்கி தத்தளித்து கொண்டிருக்கிறது. அதனால், மக்கள் இன்று அரசியல் போரட்டத்தில் களமிறங்கி உள்ளனர்.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து மக்கள் மீதான அடக்குமுறையை ஆளும் அரசியல்வாதிகள் எந்த வடிவத்திலாவது தொடர்ந்து நடத்தி கொண்டுதான் இருக்கிறார்கள்.
1980-களில் தொடங்கி, கடந்த 25 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போரில் அந்நாட்டு மக்கள் சொல்லொனா துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர்; குறிப்பாக, வடக்கு கிழக்கைப் பூர்வீகமாகக் கொண்ட இலங்கை தமிழர்கள் தங்களின் வாழ்வியல் இடங்களில் இருந்து விரட்டப்பட்டதும், அவர்களின் வரலாற்று விழுமியங்கள் அழிக்கப்பட்டதும் மிக மிகக் கண்டிக்கத்தக்க ஒரு விடயம்.
2009-ல் நடந்த உச்சகட்டப் போரின் போது, இலங்கை இராணுவம் சர்வதேசப் போர் விதிகளை அலட்சியப்படுத்தியதோடு; நாகரிகமற்ற முறையில் அப்பாவி மக்கள் மீது கொடூரமான தாக்குதல்களை மேற்கொண்டது. அதன் ஒளிநாடா பதிவுகளை அப்போது சேனல் 4 தொலைகாட்சி, அதன் செய்திகளில் விரிவாக ஒளிபரப்பியது.
இலங்கை அரசு மேற்கொண்ட இறுதிகட்ட போர் தமிழர்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு எந்த ஒரு நிரந்தர தீர்வையும் கொண்டுவரவில்லை; மாறாக, அந்தத் தீவில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த இரு இனங்களுக்கிடையே பிரிவினை எண்ணங்களையே மேலும் ஆழப்படுத்தியுள்ளது என இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் பி.எஸ்.எம். கூறியுள்ளது.
இலங்கை பேரினவாத அரசின் பிரித்தாளும் கொள்கையை மக்களிடத்தில் எடுத்து சொல்லும் பெரிய பொறுப்பு முற்போக்கு இடதுசாரி கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் உள்ளது. போரில் தமிழ்மக்கள் எதிர்நோக்கிய இன்னல்கள், தொடரும் அவர்களின் விவசாய நில ஆக்கிரமிப்பு, பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை விசாரணையின்றி தடுப்புக் காவலில் சித்திரவதைச் செய்வது போன்றவற்றைச் சிங்கள மக்களுக்கு விளக்கப்படுத்த வேண்டும் என பி.எஸ்.எம். கட்சியைச் சார்ந்த மோகன் பெரியசாமி தெரிவித்தார்.
“அரசியல்வாதிகள் தங்களின் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள, பௌத்தசிங்கள இனவாதத்தைப் பயன்படுத்தி வருவதை உணர்த்த வேண்டும்.
“தமிழ் மக்கள் வர்க்க ரீதியில் ஒடுக்கப்பட்ட அனைத்து சமூகத்துடனும் இணைந்து, தங்களுக்கான நீதியைப் பெற போராட வேண்டும்,” என்றார் அவர்.
இனப்படுகொலை நடந்து 13 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தமிழர்களுக்கான நீதி மறுக்கப்பட்டு வருகிறது என்பதை இந்த உலகம் உணராமல் இருப்பது வேதனையான விடயம் என்ற அவர், “இரண்டு தேசிய இனங்களுக்கான பிராந்திய எல்லைகள், இறையாண்மை காக்கப்பட்டு சமத்துவக் கோட்பாட்டுடன் இணைந்து மேன்மையடைய இலங்கை அரசு நேர்மையான திட்டங்களை முன் வைக்க வேண்டும்,” என்றும் சொன்னார்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் மாண்ட அப்பாவி மக்களுக்கு மலேசிய சோசலிசக் கட்சி தனது மரியாதையைப் பதிவு செய்கிறது எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.