மலேசியாவின் பொருளாதாரம் சரியான திசையில் நகர்கிறது – நிதியமைச்சர்

சவாலான சூழலுக்கு மத்தியிலும் மலேசியாவின் பொருளாதாரம் சரியான திசையில் நகர்வதாக நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் கூறியுள்ளார்.

2022 முதல் காலாண்டில் 5.0 விழுக்காடு என்கிற வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இருந்துள்ளது, இது எதிர்பார்ப்புகளை விட அதிகமாக இருந்தபோதிலும், பணவீக்கம் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது என்றார் அவர்.

“பெட்ரோல், உணவுப் பொருட்கள்,மற்றும் சில அத்தியாவசியப் பொருட்களுக்கான மானியங்களை உயர்த்தியுள்ளோம்”.

“இது பணவீக்கத்தை மிகவும் குறைவாக வைத்திருக்க உதவியது. கடந்த மாதம் மலேசியாவில் பணவீக்க விகிதம் 2.2 விழுக்காடாக இருந்தது, தற்பொழுது நன்றாக இருக்கிறது.

“நாம் கவனம் செலுத்த வேண்டியது, தேவைப்படும் மானியங்கள்தான் இலக்காக இருக்க வேண்டும். அனைவருக்கும் மானியம் வழங்க முடியாது என்று நினைக்கிறேன். ஆனால் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு இன்னும் எங்கள் உதவி தேவைப்படுகிறது, ”என்று அவர் இன்று பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

மே 22-26 வரை சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டதை ஒட்டி இந்த நேர்காணல் நடைபெற்றது.

மே 2020 இல் 5.3 விழுக்காடு ஆக இருந்த மலேசியாவின் வேலையின்மை விகிதம் கடந்த மாதம் 4.1 விழுக்காடாக குறைந்துள்ளது என்று தெங்கு ஜாஃப்ருல் கூறினார்.

விநியோகச் சங்கிலியைப் பாதித்த புவிசார் அரசியல் உட்பட, மலேசியா பகுதிக்குள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாக அவர் கூறினார்.

மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான சீனாவால் விதிக்கப்பட்ட கோவிட்-19 கட்டுப்பபாடுகள் மற்றொரு சவாலாகும் என்று அவர் கூறினார்.

“இருப்பினும், மலேசியா பண்டங்களின் நிகர ஏற்றுமதியாளராக உள்ளது, இது சில தாக்கங்களை உள்வாங்க நமக்கு உதவும்” என்று தெங்கு ஜஃப்ருல் மேலும் கூறினார்.

FMT