எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் அவல நிலையைக் கவனிக்குமாறு பாதுகாப்பு அமைச்சரை வலியுறுத்தியுள்ளார், அரசாங்கம் அவர்களின் ஓய்வூதியக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மற்றும் அவர்களின் நலன் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்கிறார்.
ஆயுதப் படைகளின் சுமார் 1,500 முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் இன்று காலை கோலாலம்பூரில் உள்ள தேசிய நினைவுச்சின்னத்தில் அமைதியான ஆர்ப்பாட்டத்தை நடத்திய பின்னர் இந் நிகழ்வு நேர்ந்தது. தங்கள் புகார்கள் செவிடன் காதில் விழுந்ததாகக் கூறினர்
நேற்று(6/6), தேசிய நினைவுச்சின்னத்தில் ஆயுதப்படை வீரர்கள் அமைதியான முறையில் கூடியிருந்ததை நான் கவனித்தேன். இந்த படைவீரர்கள் பாதுகாப்பு அமைச்சின் கவனத்தை ஈர்க்க முடியாத பின்னர், தமது உரிமைகளுக்காகவும், தாங்கள் எதிர்கொள்ளும் இதர பிரச்சினைகளுக்காகவும் போராடுவதற்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது என்பது தெளிவாகத் தெரிந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்
பக்காத்தான் ஹராப்பானில் உள்ள எனது நண்பர்களும் நானும் இதற்கு முன்னர் பல தடவைகள் இப்பிரச்சினைகளை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் சென்றிருந்தோம், இன்று இந்த விசயம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சரை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்றார்.
“நமது தேசத்திற்காக நிறைய தியாகங்களைச் செய்த நமது ஆயுதப் படை வீரர்களின் குரலைப் புறக்கணிக்காதீர்கள்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்று காலை, ஆயுதப்படைகளின் (இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை) மூன்று படைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் தேசிய நினைவுச்சின்னத்தில் கூடி, முன்னாள் வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்று கோரினர்.
2013-க்கு முந்தைய ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய விகிதத்தை புத்ராஜெயா அதிகரிக்க வேண்டும் என்றும், 21 ஆண்டுகளுக்கும் குறைவாக ஆயுதப் படைகளில் பணியாற்றியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர்.
பேரணி ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவர் மியோர் ரோஸ்லி மியோர் ஜாஃபரின்(Mior Rosli Mior Jaafar) கூற்றுப்படி, இன்று 300,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் B40 குறைந்த வருமானம் கொண்ட குழுவில் உள்ளனர்.
முன்னாள் விமானப்படை கமாண்டோ மற்றும் மேஜர் அந்தஸ்தில் இருந்து ஓய்வு பெற்ற மியோர் ரோஸ்லி, கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த பிரச்சினைகளில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கவனத்தை ஈர்க்க முயற்சித்ததாகவும், ஆனால் எந்த பயனும் இல்லை என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஹிஷாம்முதீன் ஹுசைன்( Hishammuddin Hussein), பக்காத்தான் ஹராப்பானின் முகமது சாபு(Mohamad Sabu) மற்றும் தற்போதைய பிரதம மந்திரியாக இருக்கும் இஸ்மாயில் சப்ரி யாகோப் போன்ற கடந்த மற்றும் தற்போதைய நிர்வாகங்களின் போது பல்வேறு பாதுகாப்பு அமைச்சர்களுடனான சந்திப்பும் இதில் அடங்கும்.