போன் ஓடோரி நடனம்: சிலாங்கூர் அரசு, மத அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கும் -அமிருதீன்

மற்ற மதங்களின் கூறுகளைக் கொண்டதாகக் கூறப்படும் போன் ஓடோரி(Bon Odori)  நடனம் குறித்து சிலாங்கூர் அரசாங்கம் மாநில இஸ்லாமிய மதத் துறை (Jais) உடன் ஆலோசனை செய்யும் என்று மந்திரி பெசார் அமிருதின் ஷாரி(Amirudin Shari) கூறினார்.

விழா குறித்த விரிவான தகவல்களை சேகரிக்க ஜப்பானிய தூதரகம் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் மாநில அரசு தொடர்பு கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

சிலாங்கூர் அரசாங்கம் இவ்விழாவைப் பற்றி எந்த ஆலோசனையையும் அல்லது கருத்துக்களையும் பெற்றதில்லை என்றும் அதை எப்போதும் ஒரு கலாச்சார நிகழ்வாகவே கருதுவதாகவும் அமிருதீன் கூறினார்.

“விழாவில் பங்கேற்பதற்கான தடை சில நாட்களுக்கு முன்பு விக்கிபீடியா மூலம் வந்ததை நாங்கள் கவனித்தோம். ஆனால், இதற்கு முன், விழாவைப் பற்றி எந்தப் பிரச்சினையும் இல்லை, ”என்று அவர் இன்று சிலாங்கூர் பொது சுகாதார ஆலோசனைக் குழுவைத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜூலை 16 ஆம் தேதி ஷா ஆலம் விளையாட்டு வளாகத்தில் நடைபெறும் போன் ஓடோரி திருவிழாவில் மற்ற மதங்களின் கூறுகள் இருப்பதால் அதைத் தவிர்க்குமாறு முஸ்லிம்களுக்கு அறிவுறுத்திய பிரதமர் துறை (மத விவகார) அமைச்சர் இட்ரிஸ் அஹ்மட்டின் அறிக்கை குறித்து அமிருதீன் கருத்துத் தெரிவித்தார்.

நேற்று, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (Jakim) நடத்திய ஆய்வில், திருவிழாவில் மதக் கூறுகள் இருப்பதாக இட்ரிஸ் கூறினார்.