இண்டர்லோக் மீட்பு அம்னோவின் பலவீனத்திற்கு அடையாளமல்ல; தேர்தலின் அறிக்குறி!

இண்டர்லோக் இலக்கிய நாவல் மீட்புக்கு பாடுப்பட்ட அனைத்து இந்திய இயக்கங்களுக்கும், குறிப்பாக தஸ்லிம்மின் நியாட் இயக்கத்திற்கும், பல மாணவர்கள் இயக்கத்திற்கும் பாராட்டுகள் தெரிவித்தார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார்.

இந்த நாவலை அகற்றவேண்டி பாக்காத்தானின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  முதல் சாதாரண உறுப்பினர்கள் வரை பல போராட்டங்களில் நேரடியாக் கலந்து கொண்டும் மற்ற இயக்கங்களின் போராட்டங்களுக்கும் பல கோணங்களில் ஊக்கமளித்தும் வந்தனர் என்றாரவர்.

“இவ்வாண்டின் தொடக்கத்தில் 4-1-2011இல் எனது செய்தி அறிக்கையில் ‘’ஜாதி துவேசத்தை உள்ளடைக்கியும், இந்து சமயப் பண்பாடுகளை சாடியும் உள்ள இண்டர்லோக் இலக்கிய நாவல் ஏழு நாட்களில் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்று 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 16ந் தேதி  துணை அமைச்சர் முருகையா விடுத்தக் கோரிக்கையை கல்வியமைச்சு கண்டுக் கொள்ளாதது ஏன்? அம்னோ பாருவின் அரசாங்கத்தில்  இந்திய சமூகத்தைச் சார்ந்த அமைச்சர், துணை அமைச்சர்களுக்கு கட்டளையிட அதிகாரமில்லையா? அல்லது பழைய பாணியிலேயே இந்திய தலைவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மகஜர் சமர்பிப்பார்கள் என்று  எதிர்பார்க்கிறார்களா என்ற கேள்வி”,  எழுப்பியிருந்ததை சேவியர் சுட்டிக் காட்டினார்.

“இது ஒரு பொறுப்புள்ள அரசாக இருந்திருந்தால் கடந்த ஆண்டே ஒரு துணை அமைச்சரின் கோரிக்கையை ஏற்று அந்தப் புத்தகத்தை நீக்கியிருக்க வேண்டும். ஆனால் சரியாக ஒரு வருடம் நாம் காத்திருக்க வேண்டியதாயிற்று.

“அரசாங்கம் இச்சமூகத்தின் உணர்வுகளை ஊணப்படுத்தி, நேரங்காலத்தை போராட்டம், மகஜர் என்று இன்னும் இழுத்தடித்துதான் வருகிறது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். 
“எங்களுக்கும், இச்சமூகத்திற்கும் நீதி வேண்டும். எங்களை அவமதிக்கும் புத்தகத்தை, எங்கள் பிள்ளைகளுக்கே பாடப் புத்தகமாக்கும் கொடுமையைக் கண்டித்து ஒரு வருடம் போராட்டம் நடத்திய பின்னரும் கூட தங்கள் தவறை ஏற்று புத்தகத்தை மீட்டுக் கொண்டதாக அறிவிக்காமல், தேர்தலுக்காக இந்திய மக்களின் வாக்குகளுக்காக அறிவிப்பு செய்திருப்பதாக அம்னோவின் குரலான பெர்காசாவே இன்று அறிக்கைவிட்டுள்ளது.

“மறைமுகமாக, இது மலாய்காரர்களின் பலவினம் என்று சுட்டிக்காட்டுவது ஆபத்தான பிற்போக்குவாதம்.

“இந்த மீட்பை எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான முன்னோடியாகவோ இந்தியர்களின் வாக்குகளை பெற பாரிசானின் திட்டமாகவோ பாரிசான் கருதட்டும். ஆனால் இனி எல்லாக் காலங்களிலும் விழிப்பாக இருக்க வேண்டியது இச்சமூகத்தின் கடமையாக இருக்க வேண்டும்.

“நடப்பு இரு கட்சி ஆட்சிமுறையிலேயே மக்களின் மிக நியமான கோரிக்கைகளை செவிமடுக்க மறுப்பவர்களிடம், முழு அதிகாரத்தையும் மீண்டும் ஒப்படைத்தால் பல விபரீதமான பின்விளைவுகளை நமது பிள்ளைகள் சந்திக்க நேரும் என்பதனை கவனத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டும்” என சேவியர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்தார்.

TAGS: