“என்ன ஊடக இருட்டடிப்பு?”, என வினவுகிறார் நஜிப்

தகவல்களை இருட்டடிப்புச் செய்வதை விட மக்களுக்குத் தகவல்களை அரசாங்கம் வழங்குவது மிக முக்கியமானது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். காரணம் அவ்வாறு இருட்டடிப்புச் செய்தால் மக்கள் மாற்று தகவல் வட்டாரங்களை நாடுவதற்கு அது வழி வகுத்து விடும் என்றார் அவர்.

“முன்பு தேவைப்படும் போது மக்கள் ஒரு சில அதிகாரத்துவ வட்டாரங்களிலிருந்து மட்டுமே தகவல்களை பெற்றனர். ஆனால் இப்போது தகவல்களைப் பெறுவதற்கு பல வகையான ஆதாரங்கள் உள்ளன.”

“நாம் குறிப்பிட்ட ஒரு தகவலைத் தெரிவிக்காவிட்டால் அவர்கள் மற்ற வட்டாரங்களிலிருந்து தகவல்களைப் பெற்று விடுவர்,” என இன்று கோலாலம்பூரில் ஒரே மலேசியா தொலைக்காட்சியை ( 1Malaysia TV ) தொடக்கி வைத்து பேசினார்.

அரசாங்கத்துக்கு மக்களுடைய தகவல் தேவைகளைப் பூர்த்தி செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் பிரதமர் சொன்னார்.

“வெற்றிடம் ஒன்று இருக்கும் போது மற்ற வட்டாரங்கள் அந்த வெற்றிடத்தை நிரப்பி தவறான, அவதூறான தகவல்களுடன் ஜோடிக்கப்பட்ட தகவல்களை வழங்கி விடக் கூடும்.”

அதனால் நாம் மக்களுக்கு துல்லிதமான விவரங்களை விரைவாக வழங்க வேண்டும்.”

தகவல்களுக்கான தேவை பெருகி வருவதைக் கருத்தில் கொண்டு மக்களுடன் சமூக ஊடகங்கள் வழி தொடர்பு கொள்ளுமாறு பிரதமர் அரசியல்வாதிகளையும் பொது நிர்வாகிகளையும் கேட்டுக் கொண்டார்.

பத்திரிக்கைச் சுதந்திரம் ‘படு வீழ்ச்சி காண்கிறது’

பிஎன் கட்டுக்குள் இருக்கும் ஊடகங்கள் கடந்த சில நாட்களில் நாட்டில் வெளியான பல முக்கியமான தகவல்களை குறிப்பாக ஊழல் மீதான செய்திகளை வெளியிடத் தவறி விட்டதாக டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் நேற்று சாடினார்.

ஊழல் குற்றங்களுக்காக சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்-டும் அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்பட வேண்டும் என பல அனைத்துலக அரசு சாரா அமைப்புக்கள் விடுத்துள்ள வேண்டுகோள்,  2009ல் 150 பில்லியன் ரிங்கிட் நாட்டிலிருந்து உறிஞ்சப்பட்டதால் கள்ளத்தனமாக மூலதனம் வெளியேறும் நாடுகள் பட்டியலில்  மலேசியா ஐந்தாவது இடத்தை வகிப்பது ஆகியவை அந்தத் தகவல்களில் அடங்கும்.

அதன் விளைவாக “பிஎன் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் ஊடகங்கள் இப்போது ‘இருட்டடிப்பு பத்திரிக்கைகளாக’ மாறி விட்டன” என அவர் விடுத்த அறிக்கை கூறியது. ஆனால் அவர் எந்த ஊடகத்தையும் பெயர் குறிப்பிடவில்லை.

கடந்த மூன்று நாட்களாக பிஎன் ஊடகங்கள் பாதகமான செய்திகளை அப்பட்டமாக ‘இருட்டடிப்பு’ செய்து வருவதால் ஏற்கனவே மோசமாக இருக்கும் மலேசியாவின் பத்திரிக்கை சுதந்திரக் குறியீடு மேலும் வீழ்ச்சி அடையும்,” என லிம் வருத்தத்துடன் கூறினார்.

அந்த ஒரே மலேசியா தொலைக்காட்சி அறிமுக நிகழ்வில் நஜிப்-பின் துணைவியார் ரோஸ்மா மான்சோருக்கு பிறந்த நாள் கேக் ஒன்றை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்கினர்.

அது நாட்டின் புதிய இணைய தொலைக்காட்சியாகும். அது பல அலைவரிசைகளைக் கொண்டுள்ளது.

அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஐ-போன், ஐ-பாட், பிளாக் பெரி, அண்ட்ராய்ட் போன்றவை வழியாகப் பெற முடியும்.

அது 1mediaiptv Sdn Bhd க்குச் சொந்தமானதாகும். ஒரே மலேசியா சின்னத்துடன் இணையத்தில் வலம் வரும் புதிய நிலையம் அதுவாகும்.