கார்டெனியா ரொட்டிக்கு எதிராக கடந்த ஒரு மாதமாக இணையம் வழியாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த ரொட்டியை சேவகர் நிறுவனம் ஒன்று தயாரிப்பதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அண்மையில் சந்தையில் நுழைந்த மாஸிமோ என்னும் போட்டி ரொட்டி நிறுவனத்துக்கு ஆதரவளிக்குமாறு அந்த பிரச்சார இயக்கம் பயனீட்டளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
மின் அஞ்சல் ஒன்று இவ்வாறு கூறுகிறது: “ரோபர்ட் குவோக் தயாரிக்கும் புதிய மாஸிமோ ரொட்டியை நாம் ஆதரிப்போம். அம்னோ சேவகர் சையட் மொக்தார் அல்புஹாரியின் டிரேட்விண்ட் குழுமத்துக்குச் சொந்தமான கார்டெனியா ரொட்டியைப் புறக்கணிப்போம்.”
அந்தப் பிரச்சாரம் இனவாதத் தொனியைப் பின்பற்றத் தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்த கார்டெனியா பேக்கரிஸ் (கேஎல்) சென் பெர்ஹாட், கடந்த மாத இறுதியில் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை வெளியிட்டது.
“ஒரு நல்ல மலேசிய நிறுவனத்துக்கு தேவையான அனைத்து பண்புகளும் தன்னிடம் இருப்பதில் கார்டெனியா பெருமை கொள்கிறது. இனம் அல்லது சமய வேறுபாடின்றி நாங்கள் சிறந்த தொழில் நிபுணர்களையும் நெறிமுறைகளையும் கொண்ட மக்களையும் வேலைக்கு அமர்த்தியுள்ளோம்.”
அந்த அறிக்கையில் தனது அலுவலகத்தில் பல படங்களையும் கார்டெனியா இணைத்துள்ளது. அதன் அலுவலகச் சுவர்களில் “ஒரே ஒரு இனம்தான் உள்ளது. அதுதான் மனித இனம்” எனக் கூறும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
சையச் மொக்தாருக்கு சொந்தமான பெர்னாஸ் (Bernas) 2001ம் ஆண்டு தொடக்கம் கார்டெனியாவில் 30 விழுக்காடு பங்குகளை வைத்திருப்பதாகவும் அது தெரிவித்தது.
பெரும்பாலான செய்திகள் சீன மொழியில்
அந்த இயக்கம் எங்கிருந்து தொடங்கியது என்பது தெரியவில்லை என்றாலும் பெரும்பாலான செய்திகள் சீன மொழியில் இருப்பதால் அது சீனப் பயனீட்டாளர்களை நோக்கமாக கொண்டுள்ளதாகத் தோன்றுகிறது.
இந்த மாதத் தொடக்கத்தில் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் செபுத்தே எம்பி தெரெசா கோக்-கின் உதவியையும் நாடினர்.
“அந்தச் செய்திகள் பல அர்த்தங்களை கொண்டிருந்தாலும் சுருக்கமாக சொன்னால் சீனர் எதிர்ப்பு அமைப்புக்கள் எனக் கருதப்படும் பிஎன், அம்னோ, பெர்னாஸ் ஆகியவற்றுடன் கார்டெனியா பிணைக்கப்பட்டுள்ளது. அதனால் மலேசிய சீனர்கள் கார்டெனியாவைப் புறக்கணித்து விட்டு அதற்குப் பதில் இன்னொரு மாதிரி ரொட்டியை வாங்க வேண்டும் என்பதாகும்.”
“எனக்கும் அந்த குறுஞ்செய்தி கிடைத்தது. சீன மொழியில் அந்தச் செய்தி எழுதப்பட்டிருந்தது. அது தீவிரமான இனவாத்தைக் கொண்டுள்ளதாக நான் கருதுகிறேன்,” கோக் தமது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கார்டெனியாவில் பெர்னாஸுக்கு 30 விழுக்காடு பங்குகள் இருந்த போதிலும் பெர்னாஸ், குவோக் நிறுவனத்திடமிருந்து கோதுமை மாவை வாங்குவதை நிறுத்துமாறு தனக்கு உத்தரவிடவில்லை என்றும் கார்டெனியா நிர்வாகம் தம்மிடம் தெரிவித்ததாகவும் அவர் சொன்னார்.
நியாயமான விலையை வழங்கும் நிறுவனத்திடமிருந்துதான், கார்டெனியா கோதுமை மாவை கொள்முதல் செய்கிறது. அது பெர்னாஸிடமிருந்து உத்தரவைப் பெறவில்லை,” என கோக் கூறினார்.
அவர் அந்த இனவாதப் பிரச்சாரத்தைக் கண்டித்ததுடன் அது போன்ற செய்திகளை மற்றவர்களுக்கு மாற்றி விடும் போது பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.