இராகவன் கருப்பையா- மலேசிய அரசியலில் அம்னோவுக்கு ஈடாக ம.இ.கா. மட்டுமே முக்கால் நூற்றாண்டைக் கடந்துள்ளது. ஆனால் மலாய்க்காரர்களின் மேம்பாட்டுக்கு அம்னோ அடித்தளமிட்ட மாதிரி இந்தியர்களின் வளர்ச்சிக்கு கட்சி அரசியல் வழி ம.இ.கா. மற்றும் பிற அரசியல் கட்சிகள் என்ன செய்தன எனும் கேள்விக்குப் பதில் அற்ற நிலையில் நம் சமூகத்தின் பெரும் பகுதி இன்னமும் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களைப் போல உருவான கொசுக் கட்சிகள் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளுக்காக அம்னோவின் காலடியில் ஏங்கிக் கிடப்பதைப் பார்க்கக் கொஞ்சம் வருத்தமாகத்தான் உள்ளது.
கடந்த காலங்களில் தேசிய முன்னணிக்கு ஆதரவாகச் செயல்பட்ட சிறு சிறு கட்சிகளுக்கு அடுத்த போதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படக் கூடும் என அம்னோ தலைவர்கள் அண்மையில் கோடிக் காட்டியதைத் தொடர்ந்து மக்கள் சக்தி, ஐ.பி.எஃப்., எம்.யு.ஐ.பி., பஞ்சாபியர் கட்சி மற்றும் கிம்மா, போன்ற கட்சிகள் உற்சாகத்தில் திளைத்திருக்கின்றன.
அக்கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள்தான் ஆனந்தக் கூத்தாடுகிறார்களேத் தவிர நம் சமூகத்தை சேர்ந்த பொது மக்கள் கிஞ்சிற்றும் சந்தோசமடைந்திருக்க வாய்ப்பில்லை. அதற்கு முக்கிய இரண்டு காரணங்களை சொல்லலாம்.முதலாவதாக சிறுபான்மை சமூகம் என்ற வகையில், அதில் உள்ள பெரும்பான்மை மக்கள் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் இருந்து அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டனர்.
இரண்டாவதாக, தொடர்ந்து பிளவுபட்ட சமூக அமைப்பு முறையில் சிக்கியதின் வழி, நம்மால் ஒன்றுபட்டு அரசியல் சமூக நீதிக்கான வாழ்வாதாரத்தை அடையும் ஆற்றல் – ஏழ்மை மற்றும் அதை ஒட்டிய வறுமை பண்பாட்டு வாழ்வியல் முறையால் உருவாகவில்லை.
மேற்கண்ட இரண்டு காரணங்களும் ஒரு புறம் வறுமை இந்தியர்களை உருவாக்கியது, இன்னொரு புறம் வாய்புக்களை ஆக்கிரமித்தவர்களை நடுதர மக்களாக்கியது.
‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி குறுக்கே நிற்பார்’ எனும் கூற்றுக்கு ஏற்ப அரசாங்கம் மானியங்களை அல்லிக் கொடுத்தாலும் அவற்றுக்காக காத்திருப்போரை அது முழுமையாகச் சென்று சேர்ந்ததாகச் சரித்திரமே இல்லை.
மித்ராவின் வழி நம் சமுகத்திற்கு அரசாங்கம் ஒதுக்கிய பெருந்தொகை பல அரசியல்வாதிகளாலும் அவர்களுடைய இடைத் தரகர்களாலும் மானாவாரியாகப் பிரித்து மேயப்பட்ட சம்பவங்கள் அண்மையில் அம்பலமானது இதற்குச் சான்று. இந்நாட்டில் நம் சமூகத்திற்கு இது ஒன்றும் புதிய விசயமில்லை என்பதும் எல்லாருக்கும் தெரியும். காலங்காலமாக நிகழும் ஒரு சாபக் கேடு என்று இதனை வர்ணித்தாலும் தவறில்லை!
நிலைமை இவ்வாறு இருக்க, அம்னோவிடம் தொகுதிகளுக்காகத் தொங்கிக் கொண்டிருக்கும் கொசுக் கட்சிகள் மட்டும் அப்படி எதனை வெட்டி முறிக்கப் போகின்றன எனும் கேள்வி நம்முள் எழவேச் செய்கிறது.
மலேசிய இந்திய முஸ்லிம்களைப் பிரதிநிதிக்கும் ‘கிம்மா’ சுமார் 46 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட போதிலும் நாட்டின் அரசியலில் இன்னமும் முன் வரிசைக்கு வர இயலாமல் அது பரிதவிக்கிறது.
அத்தகைய நிலைமைதான் மலேசியப் பஞ்சாபியர் கட்சிக்கும். சற்று பழமையான அக்கட்சியும் வலுவில்லாத ஒன்றுதான்.
ம.இ.கா.வின் முன்னாள் உதவித் தலைவரான மறைந்த எம்.ஜி.பண்டிதன் கடந்த 1990ஆம் ஆண்டில் ஐ.பி.எஃப் எனப்படும் இந்தியர் முன்னேற்றக் கட்சியைத் தொடக்கினார்.
அதே போல சாமிவேலு காலத்தில் ம.இ.கா.வில் இருந்த நல்ல கருப்பன் கடந்த 2007ஆம் ஆண்டில் எம்.யு.ஐ.பி. எனும் மலேசிய இந்தியர் ஐக்கிய கட்சியைத் தோற்றுவித்தார்.
இக்கட்சிகள் எல்லாமே ஏன் அம்னோவுடன் தொத்திக் கொள்ளத் துடிக்கின்றன என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
ம.இ.கா.வுக்கே எத்தனைத் தொகுதிகள் கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது. நிலைமை இவ்வாறு இருக்க இந்த கொசுக் கட்சிகளுக்கான ஒதுக்கீடு பற்றித் தெளிவாகத் தெரியவில்லை.
பாரிசானில் இருந்து வெளியேறிவிட்ட கெராக்கான் கட்சி கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள் இக்கட்சிகளுக்கு வழங்கப்படும் என அம்னோ கோடிக் காட்டியுள்ள போதிலும் இதில் சந்தோசப்படுவதற்கோ கொண்டாடுவதற்கோ ஒன்றுமில்லை. ஏனென்றால் கெராக்கான் போட்டியிட்ட 11 நாடாளுமன்றம் மற்றும் 31 சட்டமன்றம், ஆகிய எல்லாத் தொகுதிகளிலும் அக்கட்சி தோல்விகளைத் தழுவியது.
இக்கட்சிகளின் கடந்த கால பங்களிப்பை அங்கீகரிப்பதில் அம்னோ தலைமைத்துவம் நேர்மையாக இருந்தால் ஜெயிக்கக் கூடிய தொகுதிகளை அது வழங்கும். மோசமான தொகுதிகளை ஒதுக்கி ப்படி இரண்டாந்தாரமாக இந்தக் குட்டிக் கட்சிகளை அது நடத்தாது.
இப்படிக் கேவலமாக நடத்தப்பட்டும் கூட வேறு வழியின்றி இக்கட்சிகள் இலவு காத்தக் கிளிகளைப் போல ஏங்கிக் கிடப்பது வருத்தமளிக்கும் ஒன்றுதான்.
அப்படியே ஓரிருத் தொகுதிகளை இக்கட்சிகள் வென்றாலும் 60 ஆண்டுகளுக்கும் மேல் நொந்துபோய் வாடிக்கிடக்கும் நம் சமூகத்திற்கு ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதுதான் உண்மை.
சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் உறவினர்களுக்கும் சகாக்களுக்கும்தான் அது நன்மையாக அமையுமே தவிர மற்றவர்களுக்கு ஒரு பிரயோஜனமும் இருக்காது.