இராகவன் கருப்பையா – சுமார் 11 ஆண்டுகளுக்கு முன் நோய்வாய்ப்பட்டு நினைவு திரும்பாமலேயே நேற்று உயிர் நீத்த ம.இ.கா.வின் முன்னாள் துணைத் தலைவர் சுப்ரமணியம் மலேசிய அரசியலில் தனித்துவம் வாய்ந்த ஒரு அரசியல்வாதி.
அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என்றால் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்க வேண்டும் என்பது நியதி. மறைந்த சுப்ராவின் வாழ்க்கை இதைத்தான் நமக்குப் புலப்படுத்துகிறது.
கல்வி, திறமை, ஆற்றல், ஆளுமை, போன்ற அனைத்தும் இருந்த போதிலும் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இல்லாததால் அவருடைய அரசியல் வாழ்க்கை வீணானது.
ம.இ.கா.வுக்கு, மாணிக்கவாசகம் தலைவராக இருந்த காலத்தில் சாமிவேலுவுக்கு முன்னதாகவே துணையமைச்சராக இருந்தவர் சுப்ரா என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மாணிக்கவாசகத்தின் மறைவுக்குப் பிறகு நிலைமை மாறியது.
சுப்ராவிற்குப் பிறகு அரசியலில் நுழைந்த பழனிவேலு, சுப்ரமணியம் சதாசிவம், விக்னேஸ்வரன் மற்றும் சரவணன் போன்ற எவருமே அவருக்கு ஈடாக அருகில் கூட நிற்க முடியாது. எனினும் சாமிவேலுவின இரும்புப் பிடியில் இருந்த கட்சியில் ஒரு அங்குலம் கூட நகர முடியாமல் சுப்ரா தனது அரசியல் வாழ்க்கையையே இழந்தார் என்பதுதான் நிதர்சனம்.
கடந்த 1979ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டு வரையில் 27 ஆண்டுகளுக்கு கட்சியின் துணைத் தலைவராக இருந்த சுப்ரா தலைநகர் டமன்சாராவிலும் ஜொகூரின் செகாமாட்டிலும் மொத்தம் 6 தவணைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
ஆனால் கடந்த 1989ஆம் ஆண்டின் கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்குத் தன்னை எதிர்த்துப் போட்டியிட சுப்ரா முடிவு செய்ததானது சாமிவேலுவின் கோபத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. சொற்ப வாக்குகளில் சுப்ரா தோல்வியடைந்தது வரலாறு.
எனினும் கட்சியின் துணைத் தலைவராக இருந்த அவர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். இதுவே அவருக்கு மிகப் பெரியதொரு பின்னடைவை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து 2006ஆம் ஆண்டில் நடைபெற்ற கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு சுப்ராவுக்கு எதிராக தனது பத்திரிகை செயலாளர் பழனிவேலுவை களமிறக்கி ஜெயிக்க வைத்தார் சாமிவேலு.
அச்சமயத்தில் பழனிவேலு அரசியலில் ஒன்று மறியாத ஒரு கத்துக் குட்டி என்பதுதான் வேடிக்கையான விசயம். சுப்ராவை அரசியலிலிருந்து முற்றாகத் துடைத்தொழிப்பதற்கான ஒரு வியூகம்தான் இது என்று அச்சமயத்தில் எல்லாருக்குமே தெரியும்.
தீவிர அரசியலிலிருந்து சுப்ரா வலுக்கட்டாயமாகக் கீழிறக்கப்பட்டதைத் தொடர்ந்து திறமை, தகுதி தராதரம் இல்லாதவர்களைகக் கொண்டு கட்சியின் தலைமைத்துவத்தை நிரப்பினார் சாமிவேலு.
அதன் விளைவுகளைத்தான் நம் சமுதாயம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இது ஒரு சாபக் கேடு என்று சொன்னாலும் அது மிகையில்லை.
சமுதாய நலன்களைப் புறந்தள்ளி தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப அரசியல் கட்சிகள் நிர்வகிக்கப்பட்டால், மாற்றங்களுக்கு ஏங்கித் தவிக்கும் மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.
கடந்த 2001ஆம் ஆண்டில் ஏற்பட்ட மூளை ரத்த அழுத்த நோயினால் படுத்த படுக்கையான அவர், ஹுசேன் ஓன், மகாதீர் மற்றும் படாவி ஆகிய 3 பிரதமர்களின் கீழ் துணையமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
பழகுவதற்கு மிகவும் இனிமையான குணமுடைய சுப்ரா ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களுக்கும் தலைமையேற்கக் கூடிய எல்லாத் தகுதிகளைப் பெற்றிருந்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வஞ்சிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டதால் கடைசி வரையிலும் ஆக்ககரமான செயல்பாட்டினை வெளிக் கொணர இயலாமல் மறைந்தார் எனும் நிலை நமது சமுதாயத்திற்கு ஓர் இழப்பாகும்!