இராகவன் கருப்பையா – கடந்த ஆண்டு மத்தியில் முன்னால் பிரதமர் முஹிடின் தனது பதவியைத் தற்காத்துக் கொள்வதற்கு எவ்வாறெல்லாம் அவதிப்பட்டார் என்பதை நாடறியும்.
எந்நேரத்திலும் பிரதமர் பதவி பறிபோகக் கூடும் எனும் சூழலில் இரவு பகலாகத் தூக்கமின்றி, நிம்மதியிழந்து அவர் அல்லோகலப்பட்டது வரலாறு.
கோறனி நச்சிலின் கொடூரத்திற்கு இலக்காகி அன்றாடம் நாடு தழுவிய நிலையில் நூற்றுக் கணக்கானோர் கொத்துக் கொத்தாகப் பரிதாபமாக மடிந்த போதிலும் அவருடைய கவனம் முழுவதும் பிரதமர் பதவியைத் தற்காத்துக் கொள்வதிலேயே இருந்ததும் நமக்குத் தெரியும்.
பிரதமர் பதவிக்கு மிரட்டல் ஏற்பட்டதால்தான் மக்களின் நலன் மீது அவரால் கவனம் செலுத்த முடியவில்லை எனும் சாக்குப் போக்குகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற போதிலும் இவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணகர்த்தாவாக இருந்தது ‘நீதிமன்றத் திரள்’ எனப்படும் அம்னோவைச் நஜிப் ரசாக்கும், ஜகிட் ஹமிடியும் மற்றும் அவர்களுடன் கூட்டாக ஊழலில் உழன்ற அம்னோ அரசியல்வாதிகள் ஆவர்.
பெர்சத்து கட்சியைச் சேர்ந்த முஹிடினை வீழ்த்தி அம்னோவைச் சேர்ந்த ஒருவரை அப்பதவியில் அமர்த்தினால் நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவதற்கு வழிவகுக்கலாம் என்பதே அவர்களுடைய சதித் திட்டம் என்பதும் வெள்ளிடைமலை.
ஆகஸ்ட் மாத மத்தியில் அவர்களுடையத் திட்டம் நிறைவேறி புதிய பிரதமராக அம்னோ உதவித் தலைவர் சப்ரி பதவியேற்ற போது அந்த ‘நீதிமன்றத் திரள்’ ஆனந்தத்தில் திளைத்தது.
ஆனால் தங்களுடைய விசமத்தனமான சுயநலத்திட்டத்திற்கு மசியாமல் சப்ரி பல்டியடிப்பார் என்று அவர்கள் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதற்குக் காரணம் சப்ரி – அன்வார் உடன்படிக்கையாகும்.
அதாவது, ஒருகுறிப்பிட்ட காலம் வரை ஆட்சி நிலைத்தன்மையுடன் நாட்டை ஆட்சிசெய்ய போதுமான ஆதரவை நாடாளுமன்றத்தில் பெற எதிர்க்கட்சியினரின் ஆதரவை சப்ரி பெற்றார். இந்த நிலைப்பாடு அம்னோவின் கனவை சிதறடித்தது.
தற்போது நாடாளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தலுக்கு வழிவிடுமாறு அவர்கள் கொடுக்கும் நெருக்குதல்களை சப்ரி கண்டும் காணாததைப் போலச் சமாளித்துக் கொண்டு சாவகாசமாக திரிகிறார்.
இருந்த போதிலும், உள்ளூர, அவருடைய நிலைமை கடந்த ஆண்டில் முஹிடின் எதிர்நோக்கிய அதே சூழல்தான் என்பதில் ஐயமில்லை. மேலும் அந்த எதிர்க்கட்சிகளுடனான உடன்படிக்கையும் ஒரு முடிவுக்கு வர உள்ளது.
பிரதமர் பதவியைத் தற்காக்கும் பதற்றத்தில் நாட்டில் நிலவும் உணவுப் பொருள் விலையேற்றத்தையும் இதர பிரச்சினைகளையும் சமாளிக்க இயலாமல் அவர் தடுமாறுவதைப்போல்தான் உள்ளது.
அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் வரலாறு காணாத அளவுக்கு கிடுகிடுவென உயர்ந்துள்ள பட்சத்தில் நாடலாவிய நிலையில் ஆங்காங்கே சிறுசிறு அமைதி மறியல்களும் நிகழத் தொடங்கிவிட்டது.
இத்தகைய அமைதி மறியல்கள் பெரும் ஆர்ப்பாட்டங்களாக உருவெடுப்பதைத் தவிர்க்க அவர் வழிக் கொணரவேண்டும். ஆனால் ‘நீதிமன்றத் திரள்’ அவரை நிம்மதியாக விட்டபாடில்லை.
நாட்டில் நடக்கின்ற எல்லா குழப்பங்களுக்கும் அம்னோ தலைவர் அஹமட் ஸாஹிட்டும் முன்னாள் பிரதமர் நஜிபும்தான் காரணம் என பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் வான் சைஃபுல் அண்மையில் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டினார்.
இவ்விருவரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு நாட்டில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் எனும் அவருடைய குற்றச்சாட்டில் எவ்வித ஐயப்பாடும் இல்லை என்பதுதான் நிதர்சனம்.
மலேசியாவை சூழ்ந்த பல்வேறு ஊழல் சம்பவங்களுக்குக் காரணமான இந்த இருவரும்தான் கடந்த ஆண்டில் முஹிடினை குறிவைத்து வீழ்த்தினார்கள் என்றும் அவர் சாடினார்.
எண்ணற்ற ஊழல் வழக்குகளில் சிக்கி அன்றாடம் நீதிமன்ற வாசல்களில் ஏறி இறங்கும் இரு நபர்கள் 33 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாட்டை உலுக்குகிறார்கள் என்பது வியக்கத்தக்க, ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விசயம்தான். அதுவும் கடந்த ஒரு ஆண்டு காலமாக நாடு இச்சூழலை எதிர் நோக்கி வருகிறது என்பது ஜனநாயகத்திற்கே சவால் விடும் ஒரு அவலம்தான்.
அப்படியென்றால் அப்பாவி மக்களின் நிலைப்பாடுதான் என்ன? இவ்விருவர் மட்டும்தான் நாட்டு மக்களின் தலைவிதியை நிர்ணயிப்பார்களா? எதிர்க்கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அனைவருமே பல்லில்லாப் புலிகள்தானா?
இவ்வாறு பல்வேறு கேள்விகளுக்கு விடைகளின்றி, இனவாத, சுயநல அரசியலுக்குப் பலிகடாவாகிப் பரிதவிப்பது பொது மக்கள்தான்!