மகிந்த ராசபக்சே & கோத்தபாய ராசபக்சேவுக்கு எந்த நாடும் தஞ்சம் அளிக்கக்கூடாது

மகிந்த ராசபக்சே மற்றும் கோத்தபாய ராசபக்சே உள்ளிட்ட தமிழின படுகொலையாளர்களை இனி எந்த நாட்டிலும் தஞ்சம் புக அனுமதிக்க கூடாது என உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டை நிர்வகிக்க தெரியாமல், சொந்த இன மக்களின் கிளர்ச்சியில் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட, போர் குற்றவாளிகளான இலங்கை முன்னாள் அதிபர்கள் மகிழ்ந்த ராசபக்சே, கோத்தபாய ராசபக்சே உள்ளிட்ட இவர்களின் குடும்பத்தார் மற்றும் தமிழின அழிப்புக்குக் காரணமான எவரையும் எந்த நாட்டிலும் தஞ்சம் புக விடாமல் விரட்டியடிக்க  வேண்டுமெனப் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வேண்டுகோள் விடுகிறது என அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

சிங்களப் பௌத்த இனவெறி அரசை வழிநடத்தி, இலட்சக்கணக்கான எமது தொப்புள் கொடி உறவுகளை இனப்படுகொலை செய்து, ஆயிரக்கணக்கில் எமது பெண்களைப் பாலியல் துன்புறுத்தலுடன் படுகொலை செய்து, போர் அறத்தையும் மீறி உலகின் தடை செய்யப்பட்ட அணு ஆயுதங்களைக் கொண்டு, எமது பல நூற்றுக்கும் அதிகமான பிஞ்சு குழந்தைகளைக் கரிக்கட்டைகளாக எரித்து, இன்றும் பல ஆயிரம் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டு இன்னும் எண்ணற்ற ஈவிரக்கமற்ற அடக்குமுறைகளை எமது இனத்தின் மீது கட்டவிழ்த்து விட்ட இவர்களை உலகத் தமிழினம் ஒரு போதும் மன்னிக்காது.

தன்னாட்சி உரிமைக்காகப் போராடிய தமிழீழ இராணுவமான விடுதலை புலிகள் அமைப்பை, இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க அரசுகளின் துணையோடு நயவஞ்சகத்தால் வீழ்த்தி, எந்த மக்களால் போற்றப்பட்டார்களோ, அவர்களே வெறுக்கும் வண்ணம் அதிகப்படியான கடன்கள், ஊழல்கள், நாட்டை நிர்வகிக்க முடியாத தவறான கொள்கைகள் என அடிப்படை தேவைக்கு நடுரோட்டுக்கு வந்து போராடும், அதே மக்களின் அடக்க முடியாத கிளர்ச்சிக்கு அஞ்சி தலைமறைவாகி நாட்டை விட்டே ஓடுகிறார்கள்.

“தற்போது சிங்கள மக்களுக்குப் புரிந்திருக்கும். சிங்கள அரசுடன் 21 நாடுகள் ஒன்று சேர்ந்து எதிர்த்த போது, தமிழீழ விடுதலைக்காக தாயகத்தில் இருந்தே எதிர்த்த எம் தலைவன் எங்கே.. மக்கள் புரட்சியில் உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டு ஓடிய இந்தத் தருதலைகள் எங்கே என..,” என்று பாலமுருகன் தெரிவித்தார்.

அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டிய, கொடுங்கோலன் கோத்தபாய ராசபக்சே, தற்போது சிங்கப்பூரில் அடைக்கலமாகி இருக்கிறார் என்ற செய்தி வருத்தத்திற்குரியதாக இருக்கிறது. சிங்கப்பூர் தமிழர்கள் இப்போர் குற்றவாளிக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனி புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் எந்த நாட்டிலும் இனப்படுகொலையாளர்கள் கால் வைக்க முடியாத நிலையை உருவாக்க வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் உலகத் தமிழர்களுக்கு  வேண்டுகோளை விடுக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.