இராகவன் கருப்பையா – நம் நாட்டை 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்த தேசிய முன்னணி அரசாங்கம் மட்டுமின்றி 22 மாதங்கள் மட்டுமே ஆண்ட பக்காத்தான் அரசாங்கமும் கூட இந்தியச் சமுதாயத்தை முற்றாகப் புறக்கணித்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது.
கல்வி, தொழில்துறை, பொருளாதாரம் போன்ற பல்வேறுத் துறைகளில் சமய, இன ரீதியில் காலங்காலமாக நாம் ஓரங்கட்டப்பட்டு வருவது ஏதோ உண்மைதான்.
பாரிசான் அரசாங்கம் மட்டுமின்றி தற்போதைய பெரிக்காத்தான் அரசாங்கத்தின் நிர்வாகத்திற்கும் அது ஒரு கலாச்சாரமாகவே போய்விட்டது. அரசாங்கத்தில் நம் சமூகத்தை பிரதிவாதிப்பதாகக் கூறிக் கொள்பவர்களும் பல்லில்லாப் புலிகளாக வெறும் தலையாட்டி பொம்மைகளாகத்தான் இன்று வரையில் காலத்தை கடத்தி வருகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.
இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு, மிகக் குறைவாக உள்ள போதிலும் ஏதோ ஒரு சிறியத் தொகையையாவது நம் இனத்தின் மேம்பாட்டுக்கு அரசாங்கம் ஒதுக்கீடு செய்கிறது.
ஆனால் ‘பிச்சை எடுத்ததாம் பெருமாள், அதை பிடுங்கித் தின்றதாம் அனுமார்’ என்பதைப் போல அந்த சிறியத் தொகையும் கூட தேவைப்படுவோரைச் சென்றடையவிடாமல் தடுத்துவிடுகிறது ஒரு கும்பல்.
செல்வாக்குப் படைத்த சிலர் தங்களுடைய அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்திக் கொண்டு, வதங்கிக் கிடக்கும் சமூகத்திற்கு சென்று சேரவேண்டிய அத்தொகையை ‘பிணம் தின்னும் கழுகுகளைப் போலப் பிரித்து மேய்ந்துவிடுகின்றனர்.
காவல்துறையில் புகார், ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார், போன்ற நடவடிக்கைகளுக்கெல்லாம் குறைச்சல் இல்லை. அதெல்லாம் வழக்கம் போல்தான் நடைபெறுகிறது. ஆனால் சரியான குற்றவாளிகள் பிடிபடுகிறார்களா, உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்களா முதலிய விவரங்கள் பெரும்பாலான சமயங்களில் வெளிச்சமாவதில்லை.
அதற்குள் மறு ஆண்டு பிறந்துவிடுகிறது, மற்றொரு ஒதுக்கீடு வருகிறது, பழைய கதை மறந்துபோய்விடுகிறது. திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடிக் கொண்டுதான் இருக்கிறது. ‘பழைய குருடி கதவைத் திறடி’ கதைதான்.
இந்திய சமூக மேம்பாட்டுக்கு மித்ராவின் வழி அரசாங்கம் ஒதுக்கிய 85 மில்லியன் ரிங்கிட்டைக் காணவில்லை – அதற்கு முன்னாள் அமைச்சர் வேதமூர்த்திதான் பொறுப்பு என ஒற்றுமைத்துறை அமைச்சர் ஹலிமா அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இப்படியொரு குற்றச்சாட்டை சுமத்திவிட்டு நாடாளுமன்றப் போர்வையில் ஹலிமா ஒளிந்து கொள்ளக் கூடாது என சீறிய வேதமூர்த்தி, துணிச்சல் இருந்தால் வெளியே வந்து ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தன் மீது புகார் செய்ய வேண்டும் என்று சவால் விட்டார்.
ஆனால் ஹலிமா அப்படிச் செய்யவில்லை. மாறாக வேதமூர்த்திதான் புகார் செய்தார். ஊழல் தடுப்பு ஆணையம் ஹலிமாவையோ வேதமூர்த்தியையோ விசாரித்ததாகத் தெரியவில்லை.
மித்ரா நிதியை ஆட்டையைப் போட்ட ‘சுறா மீன்களை’ விட்டுவிட்டு ஊழல் தடுப்பு ஆணையம் ‘நெத்திலி மீன்களை’ மட்டுமே பிடித்துள்ளது என அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வேதமூர்த்தி சாடினார். வெறும் கண் துடைப்புக்காகத்தான் இதுபோன்ற சாதாரணமான கைது நடவடிக்கைகள் என்றார் அவர்.
நிலைமை இவ்வாறு இருக்க, அநேகமாக இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த 85 மில்லியன் ரிங்கிட் விவகாரம் மறக்கப்பட்ட ஒன்றாகிவிடும். உண்மையான களவாணிகள் கொண்டாடுவார்கள்.
துன்பத்தில் துவண்டு கிடக்கும் நம் சமூகத்திற்கு 85 மில்லியன் மிகச் சிறியத் தொகைதான் என்ற போதிலும் பண நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருக்கும் எத்தனையோ சிறு தொழில் முனைவர்களுக்கு அது பயன்பட்டிருக்கும். எண்ணற்ற மாணவர்களின் உயர் கல்விக்கு உதவியாக இருந்திருக்கும். வறுமையில் வாடும் பி40 தரப்பைச்சேர்ந்த பலரின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம்.
ஆக ஆண்டாண்டு காலமாக பெரும்பாலான சமயங்களில் நம் சமுதாயம் அரசாங்க ஒதுக்கீட்டை அறிவிப்பாக மட்டும்தான் பார்க்கிறதே தவிர அதனை அனுபவிக்க இயலாமல் களவாணி அரசியல்வாதிகளிடமும் அவர்களுடைய இடைத்தரகர்களிடமும் பறிகொடுத்துவிடுகிறது.
நம் நாட்டில் ஊழல் மிகுந்த அரசியல்வாதிகள் முறையாகத் தண்டிக்கப்படுவதில்லை. மாறாக அரசாங்கத்தின் பல நடவடிக்கைகள் அத்தகைய ஊழல்வாதிகளுக்கு உரமாகத்தான் உள்ளது – அப்பட்டமாகவேதிருடுகின்றனர்.
இச்சூழல் மாறாத வரையில் நம் சமுதாயத்திற்கு ஒவ்வொரு விடியலும் சற்று இருட்டாகத்தான் இருக்கும்!