ஶ்ரீலங்கா போன்று மலேசியா திவாலாவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவே என்கிறார் மலேசிய நிதி அமைச்சர் துங்கு ஜஃப்ருல் துங்கு அஜிஸ். அமைச்சரின் உத்திரவாதம் ஆறுதலாக இருந்தாலும் மலேசியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பின்னடைவைச் சாதாரணமாகக் கருதுவது தவறான போக்காகும்.
ஶ்ரீலங்காவின் பொருளாதாரச் சீரழிவுக்கு என்ன காரணம் எனறு ஆய்ந்துப் பார்க்கும்போது பற்பல காரணங்கள் வெளிப்படுகின்றன. அந்தக் காரணங்கள் மலேசியாவில் ஏற்பட்டனவா, ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதைக் கவனத்தில் கொள்ளாமல் ஒதுக்குவது ஆபத்தான விளைவுகளுக்கு உரமாகிவிடும். ஆபத்தான அணுகுமுறையாகும். வெப்பமண்டலத்தின் ஒப்புவுயர்வற்ற பொருள் ஶ்ரீலங்கா என வருணிக்கப்படுவது இயல்பு.
ஒரு காலத்தில் அந்த நாட்டின் மக்கள் கல்வியில் உயர்ந்து மருத்துவம், சட்டம் மற்றும் ஏகப்பட்ட துறைகளில் முன்னணியில் திகழ்ந்தார்கள். அவர்களின் சேவை பல நாடுகளில் தேவைப்பட்டது. இப்பொழுது அவர்கள் பிழைப்பைத் தேடி பல நாடுகளில் அடைக்கலம் காண வேண்டிய நிலைக்கு உந்தப்பட்டுவிட்டனர். குறிப்பாகத் தமிழர்கள். சிங்களவர்களும் உண்டு.
அரசியல் கணிப்பாளர்கள் தங்களின் கருத்தை வெளியிடும்போது அவர்களுக்கு எது முக்கியமெனப்படுகிறதோ அதை மட்டும் முன்வைப்பார்கள். நம் நாட்டு அரசியல், பொருளாதார நிபுணத்துவ ஆய்வாளர்கள் ஶ்ரீலங்காவோடு மலேசியாவை ஒப்பிடும்போது ராஜபட்சே குடும்பச் செல்வாக்கு அரசியலில் மேலோங்கி மட்டற்ற பேராசைக்கு வித்திட்டது என்ற குற்றச்சாட்டும் உண்டு.
அது உண்மையும் கூட. பொதுவாகவே முடியாட்சியாகவோ அல்லது குடியாட்சியாகவோ எதுவாக இருந்தாலும் குடும்ப அரசியல் ஆதிக்கம் செலுத்துமானால் நாட்டின் அழிவு உறுதி என்று சொல்லலாம். குடும்ப அரசியல் என்றால் பேராசைக்குத்தான் முதல் இடம். அது தலைவிரித்தாடும்போது நாட்டின் நிர்வாகம், பொருளாதாரம், நீதித்துறை யாவும் பாதிப்புற்று நாட்டின் நலிவுக்குக் காரணிகளாகும்.
இந்தக் குடும்ப அரசியல் செல்வாக்கோடு நாட்டு நிர்வாகத்தில் அனுபவமற்றவர்கள் பொறுப்பில் இருந்ததால் அதுவும் இன்றைய ஶ்ரீலங்காவின் பரிதாப நிலைக்குக் காரணம் என்கிறார்கள். இவையன்றி மேலும் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவை பொதுவானவை. நியாயப்படுத்தலாம் அல்லது பலவிதமான குற்றச்சாட்டுகளில் அவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.
பொருளாதாரச் சீர்கேடுகள் நிகழ்ந்ததற்கான காரணங்கள் என்ன? இவைதான் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. நாட்டில் மக்களிடையே நல்லிணக்கம் இருந்தால்தானே அமைதி நிலவும். மக்களிடையே நிலவும் நல்லிணக்கமும், அமைதியும்தானே பொருளாதாரச் செழுமைக்கு அடித்தளங்களாக அமையும்.
ஶ்ரீலங்கா மக்களிடையே நல்லிணக்கத்தைப் பேண தவறியது அரசு. சிங்கள மக்கள் தமிழர்களை வெறுத்தார்கள். அந்த வெறுப்புணர்வை அரசியலாக்கி தமிழர்களைத் துன்புறுத்தியதை உலகம் மறக்கவில்லை. ஒருபோதும் மறக்காது. இன, சமய நல்லிணக்கத்தைப் புறக்கணித்துவிட்டு பெரும்பான்மையினரின் ஆதரவைத் திரட்டி சிறுபான்மையினர்க்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவுகள் பொருளாதாரச் சீரழிவுக்குக் காரணம் என்றால் மிகையாகாது.
இன்றைய மலேசியாவின் பொருளாதாரம் பாதிப்புற்றிருந்தாலும் அது மீட்சி பெறுவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு என்பவர்கள் இன, சமய, மொழி இணக்கம் போன்ற அடிப்படை உரிமைகளைத் தட்டிக்கழிக்க முற்பட்டால் ஶ்ரீலங்கா கற்பிக்கும் பாடத்தை மனத்தில் கொள்வது விவேகமாகும். இந்த எச்சரிக்கையை அரசியல் பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தத் தயங்காததைக் கவனிக்க வேண்டும்.
எவ்வளவுதான் பொருளாதாரச் செழுமைக்கான திட்டங்கள் இருந்தாலும் மலேசிய மக்களிடையே நல்லிணக்கம், மலேசியர் என்ற ஒற்றுமை உணர்வு; எல்லா மலேசியர்களுக்கும் இங்கே இடம் உண்டு, உரிமை உண்டு என்பதை உறுதிப்படுத்தி அவற்றை மதித்துச் செயல்பட்டால் அன்றி நாடு சுபிட்சத்தைக் கண்டாலும் அது நிலைக்காது. ஶ்ரீலங்கா தலைவர்களின் பிரதான தவறு பெரும்பான்மையினர் மனத்தில் சிறுபான்மையினர் மீது விதைக்கப்பட்ட வெறுப்புணர்வாகும். இப்படிப்பட்ட வெறுப்புணர்வின் சாயல் மலேசியாவில் கிடையாது என்று சொல்ல முடியாது.
ராஜபட்சேயின் குடும்பம் ஊழலிலும் கைதேர்ந்தவர்களாகவே காணப்படுகின்றனர். அதற்குப் போதுமான சான்றுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. நம் நாட்டில் ஆட்சியில் இருந்தவர்களில் முக்கியமானவர்கள், அவர்களின் நெருங்கிய சொந்தங்கள் பெற்றிருக்கும் செல்வம் நாணயமான வழியில் சம்பாதிக்கப்பட்டவை அல்ல என்று சொல்லப்படுவது உண்மையானால் இதுவும் ஆபத்தான வழிமுறைதானே!
அரசியலில் பொய் உரைப்பது ஒன்றும் விசித்திரமல்ல. அது சர்வசாதாரணமானது. இன்றைய மலேசிய அரசியலில் நடப்பதைப் பார்க்கும்போது தலைவர்கள் அவ்வப்போது சொல்லும் கருத்துக்கள் யாவும் மலேசிய அரசியல் கலாச்சாரம், அரசியல் வாழ்க்கை புது அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது எனலாம். ஏனெனில் அதிகாரப் பேராசை, பதவி பேராசை இவற்றை ஒட்டிக்கொண்டிருக்கும் பணப் பேராசை யாவும் நல்லாட்சிக்கு வழிகோலாது.
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக் ஊடகங்களில் பொய் சொல்வது குற்றமல்ல என்கிறார். அவர் சொல்வது உண்மை எனின் உண்மைக்கும், பொய்மைக்கும் உள்ள வேறுபாடுகள் தேவையில்லாமல் போய்விடும்! இதற்கு முன்பு, அமைச்சர் ஒருவர் திருடியவர் குற்றம் சாட்டப்பட்டால்தான் திருட்டு; குற்றம் சாட்டப்படாவிட்டால் திருட்டு அல்ல என்றார். இதுதான் இன்றைய மலேசிய அரசியல் கலாச்சாரம். அதற்குத் தலைமை வகிப்பவர்கள் நஜீப் போன்றவர்கள் என்றால் நாட்டின் நிலை என்னவாகும்?
ஶ்ரீலங்காவோடு மலேசியாவை ஒப்பிட வேண்டாம் என்பதில் நியாயம் இருக்கலாம். அந்த நிலைதான் நமக்குத் தேவை. அந்த நிலை உறுதியாக வேண்டும். அந்த உறுதி ஏற்பட என்ன செய்ய வேண்டும்?
ஶ்ரீலங்கா போற்றி வளர்த்த இன, சமயம், அரசியலைக் கைவிட்டு எல்லா மலேசியர்களும் தேவை; அவர்களின் சட்டப்பூர்வமான எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்படும், மதிக்கப்படும் என்ற தெளிந்த உணர்வோடு செயல்பட்டால் நல்லது. மலேசியா திவாலாகாது!
2018ஆம் ஆண்டு நம்பிக்கை கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது மலேசியா 250 நூறு கோடி (பில்லியன்) கடன் பட்டிருந்தது. இந்தக் கடனைத் தீர்க்க மலேசியர்கள் கூட்ட நீதி ஆரம்பித்த இருபத்து நான்கு மணி நேரத்தில் இருபது இலட்சம் திரட்டப்பட்டது.
இந்த நல்லெண்ணத்தை ஆட்சியில் இருப்பவர்கள் மறக்கக்கூடாது, துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. மலேசியர்கள் காப்பாற்றுவார்கள். தலைவர்கள்தான் நாணயமாக நடந்து கொள்ள வேண்டும். மலேசியாவின் இன்றைய கடன் ஆயிரத்து நாற்பத்தைந்து டிரில்லியன் என்று சொல்லப்படுகிறது. விவேகமற்ற முறையில் பொருளாதாரத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் மக்களால் கடன் பளுவைத் தாங்க முடியாது. அதுவே அரசுக்கு எதிரான நடவடிக்கைக்கு வித்திட்டுவிடும்.
Sri Lanka ?????? This should be” ILANKAI” in Thamil