முஸ்லீம் அல்லாதோர் உரிமைகள் குறித்த அறிக்கைகளை அமைச்சர் நிறுத்த வேண்டும் – ரவுப் எம்பி

முஸ்லிம் அல்லாதவர்களின் கலாச்சார மற்றும் வணிக நடவடிக்கைகளின்  சுதந்திரத்தை மீறும் அறிக்கைளை வெளியிடுவதை நிறுத்துமாறு மத விவகார அமைச்சரை, ரவூப் எம்பி தெங்கு சுல்புரி ஷா ராஜா பூஜி வலியுறுத்தியுள்ளார்.

அக்டோபர்பெஸ்ட் என்ற கேளிக்கை பண்டிகையால் ஏற்படக்கூடிய சமூக பிரச்சனைகளை காரணம் காட்டி, நாட்டில் நடத்தப்படும் அக்டோபர்பெஸ்ட் நிகழ்வை தடை செய்ய வேண்டும் என்று மத விவகார அமைச்சர்  இட்ரிஸ் அமாட் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இட்ரிஸ்சின் அனைத்து அறிக்கைகளும் அரசாங்கத்தால் முன்னோடியாகக் கொண்டுவரப்பட்ட கெலுவார்கா மலேசியா முழக்கத்தின் அடித்தளத்திற்கு முரணானது என்று தெங்கு சுல்பூரி (மேலே) கூறினார்.

இந்த விவகாரத்தில் அமைச்சரின் தலையீடு இஸ்லாத்தின் போதனைகளுக்கு முரணானது என்றார்.

“முஸ்லிம்கள் மதுபானங்களை அருந்தக்கூடாது மற்றும் இஸ்லாத்தின் அடிப்படையில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதை ஒரு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்களின் கலாச்சார, வாழ்க்கை மற்றும் வணிக விவகாரங்களில் தலையிடக்கூடாது.”

“இந்த தலையீடு இஸ்லாத்தின் போதனைகளுக்கு முரணானது, தவிர, முஸ்லிம் அல்லாதவர்களின் ஹலால் அல்லாத வணிக நடவடிக்கைகள் கூட்டாட்சி அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரமாகும்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

மத விவகார அமைச்சர் இட்ரிஸ் அகமது

அக்டோபர்பெஸ்ட் என்பது மேற்கத்திய நாடுகளில் தோன்றிய இலையுதிர்கால பண்டிகை என்றும், பாலஸ்தீனம் போன்ற நாடுகள் உட்பட உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் அல்லாத சமூகங்களால் கொண்டாடப்படுகின்றது என்றும் அவர் நினைவுபடுத்தினார்.

மலேசியாவில், அக்டோபர்பெஸ்ட் என்பது ஹலால் அல்லாத உணவகங்கள் மற்றும் பப்களில் உள்நாட்டில் நடைபெறும் பீரை விளம்பரப்படுத்தும் திருவிழாவாகும்.

சகிப்புத்தன்மையற்ற அறிக்கைகள்

கொண்டாட்டத்தில் இஸ்லாமிய விவகாரங்கள் இல்லை என்பதால், இத்ரிஸ் நேரடியாக அக்டோபர்பெஸ்ட் குறித்து எந்த அறிக்கையையும் வெளியிடக்கூடாது என்று தெங்கு சுல்பூரி வாதிட்டார்.

“முஸ்லிமல்லாத உணவக வணிக நடவடிக்கைகள் தொடர்பான இத்ரிஸின் அறிக்கை உண்மையில் இஸ்லாத்தின் உருவத்தையே பாதித்துள்ளது, ஏனெனில் இது இஸ்லாத்தை மற்ற மதங்களைப் பின்பற்றுபவர்களின் வாழ்க்கை முறைக்கு சகிப்புத்தன்மை இல்லாத ஒரு மதமாக சித்தரிக்கிறது.”

“இதுபோன்ற சகிப்புத்தன்மையற்ற அறிக்கைகள் முஸ்லிமல்லாதவர்களிடையே அவை இஸ்லாத்திற்கு எதிராக அச்சத்தைத் தூண்டியுள்ளன.”

மத விவகார அமைச்சராக பதவியேற்றதில் இருந்து, இத்ரீஸ் நாட்டில் உள்ள முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

ஜூன் 9 அன்று, சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா,  ஷா ஆலமில் நடந்த போன் ஓடோரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு இட்ரிஸைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிகழ்வு மதரீதியிலானது என்ற அமைச்சரின் கருத்துடன் சுல்தான் உடன்படவில்லை.

“ஜூலை 16-ம் தேதி போன் ஓடோரி கொண்டாட்டத்தில் அமைச்சர் கலந்து கொள்ளுமாறு அவரது மாட்சிமை பரிந்துரைக்கிறது … அதனால் அவர் மதத்திற்கும் கலாச்சாரத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ள முடியும்” என்று மன்னர் ஒரு அறிக்கையில் தெரிவித்துத்திருந்தார்.

2016 இல் நிகழ்வில் கலந்து கொண்ட சுல்தான் , இது முற்றிலும் கலாச்சாரம் என்றும், முஸ்லிம்களின் நம்பிக்கையை அச்சுறுத்தும் மத அல்லது சடங்கு கூறுகளை உள்ளடக்கவில்லை என்றும் கூறினார்.

ஜக்கிமைப் பயன்படுத்தி பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும், ஜக்கீமின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக்கூடிய, குழப்பமான, துல்லியமற்ற அறிக்கைகளை  அமைச்சர் வெளியிட வேண்டாம்  என்றும் சுல்தான் கேட்டுக்கொண்டார்.