முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தண்டனைக்கு எதிரான இறுதி மேல்முறையீட்டில் புதிய ஆதாரங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியை உச்ச நீதி மன்றம் நிராகரித்ததை அம்னோவின் முக்கிய இரு தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
நேற்றிரவு அம்னோ தலைவர் அமாட் ஜாஹிட் ஹமிடி ஒரு அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் அவரது கட்சி “வருத்தம்” அடந்த்தாக கூறினார்.
“நீதிமன்ற விவகாரங்களில் அம்னோ தலையிடாது. எவ்வாறாயினும், நீதி வழங்கப்படுவது மட்டுமல்ல, அது நியாயமாக இருப்பதையும் பார்க்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று ஜாஹிட் கூறினார்.
கட்சியின் துணைத் தலைவர் முகமட் ஹசன் ஒரு தனி அறிக்கையில், அனைத்து ஆதாரங்களும் பரிசீலிக்கப்பட வேண்டும் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் ஒதுக்கி வைக்கப்படக்கூடாது என்றும் கூறினார்.
“தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற சட்டக் கோட்பாட்டை அம்னோ ஏற்றுக்கொண்டு மதிக்கும் அதே வேளையில், அவசரப்பட்ட நீதி புதைக்கப்பட்ட நீதி என்பதை அம்னோ வலியுறுத்துகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
செவ்வாயன்று, உச்ச நீதிமன்றம் நஜிப்பின் மேல்முறையீட்டில் புதிய ஆதாரங்களை அறிமுகப்படுத்துவதற்கான விண்ணப்பத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது.
அப்போதைய உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி தனது வழக்கை விசாரிக்கவும் அவரைத் தண்டிக்கவும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற வகையில் புதிய ஆதாரங்களை அறிமுகப்படுத்த முயன்றார். ஆனால் உச்ச நீதிமன்றம் அதை ஏற்க வில்லை.